பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 7 ஆகஸ்ட், 2013

நல்ல யோசனை

FB  இருந்தப்போ நண்பர் கார்த்திக்கின் போஸ்ட் படிக்குற வாய்ப்பு கிடைச்சது.. விமானத்துல அடிக்கடி பண்ணும் இவருக்கு தாய்மொழிப் பற்றும் இருக்கு .. அதனால தான் தமிழ்நாட்டுக்கு வரும்  விமானத்துல பணிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேசுறாங்க அறிவிப்பு பண்றாங்க, தமிழ்லையும் பேசினா உதவியா இருக்குமேன்னு ஆதங்கப்படுவதோட இல்லாம தமிழ்லையும் பேசனும்னு பசிந்துரை பண்ணிட்டு வந்திருக்காரு  ..அவரோட அந்த போஸ்ட் இங்க...

கடந்த 2 வருடத்தில், 20 முறைக்கு மேல் விமானத்தில் ,சென்னை -டெல்லி மார்க்கத்தில் ,பயணம் செய்திருப்பேன்...

விமானத்தினுள் , 'அவசரகாலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும்' னு முகத்துக்கு பெயிண்ட் அடிச்சியிருக்குற பணிப்பெண் 15 நிமிட விளக்கம் மற்றும் செய்முறை தருவார்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்..ஒரு முறை கூட அந்த அறிவிப்பு தமிழில் தரப்படவில்லை...

சென்னை -டெல்லி மார்க்கத்தில் (எனது கணிப்பின் படி ) 50 % க்கும் மேற்பட்ட பயணிகள் தமிழர்கள்.. பணிப்பெண் பேசும் ஆங்கிலத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. பல முறை அவர்களிடம் விளக்கும்படி கேட்பேன்.பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் (தமிழர் தான்) நம்மை ஏளனமாக பார்ப்பார்...


இந்த நிமிடம் வரை அந்த செய்முறை எனக்கு முழுமையாக புரியவில்லை ..
spice ஜெட் airwaysன் முக்கியமான பங்குதாரர் நம்ம sun network..அந்த விமானத்தில் கூட தமிழ் அறிவிப்பு கிடையாது..

அடுத்து...

டெல்லி - சென்னை விமானத்தில்,என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும்.

பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை .2 நிமிடம் பணிப்பெண் வற்புறுத்திக்கேட்டும் அவர் ஒன்றும் சொல்லாமல் ,ஜன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டார்..

அப்பொழுது தான் புரிந்தது - அந்த தமிழருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. (தமிழ் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பணிப்பெண்ணின் ஆங்கிலம் புரிவது சற்று கடினம்.speed,slang நமக்கு புதுசா இருக்கும்).பணிப்பெண்ணுக்கு தமிழ் தெரியாது.

அந்த தமிழரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. "அண்ணே உங்க டிக்கெட்டை கேக்குறாங்க"னு நான் சொன்னேன்.அவரும் சிரித்துக் கொண்டே டிக்கெட்டை(Boarding Pass) எடுத்துக் காண்பித்தார்.பணிப்பெண் டிக்கெட்டை பார்த்து உணவு வழங்கினார். அவமானத்தில் அந்த தமிழர் தலையை கூட மேலே தூக்கவில்லை .அந்த தமிழருடன் மேலும் 4 பேர் வந்திருந்தனர் .அவர்களும் இதே நிலைமையில்.

பணிப்பெண்ணிடம் நான் கேட்டேன் : "இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. உங்கள் குழுவில் யாருக்குமே தமிழ் தெரியாதா?". 'தெரியாது'னு பதில் சொன்னார்.

''அவசர காலத்தில் எப்படி தப்பிப்பதுனு நீங்க சொல்லிக் கொடுக்குற செய்முறை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும் ? தமிழ்நாட்டுக்கு போகிற விமானத்தில் தமிழ் தெரிந்த பணிப்பெண் ஒருவர் கூட இல்லையா? ஏன்?" என்று கேட்டதற்கு , "ஹிந்தி தேசிய மொழி. அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்" னு பதில் சொன்னார்.. பயங்கர கோவம் வந்தது..பொளிச்சுனு அரையலாம்னு தோணுச்சு. "உங்களுக்கு இந்தியாவின் மொழி கொள்கை பற்றியோ, நேரு- இந்திரா காந்தி கொடுத்த வாக்குறுதி பற்றியோ தெரியவில்லை.நீங்க Complaint book கொண்டு வாங்க. நான் complaint செய்கிறேன்"னு சொன்னதும் , "வேண்டாம் .வேண்டாம் .நான் உங்களது கருத்தை தெரியபடுத்தி விடுகிறேன்"னு சொன்னார்.

வெட்கத்தில் அந்த பயணி தலை குனிந்தபடியே இருந்தார். அந்த தமிழருக்கு தெரிந்த ப்ளம்பர் வேலை, இந்த லிப்-ஸ்டிக் போட்ட ஏர் ஹோஸ்டசுக்கு தெரியாது.தெரியத்தேவையில்லை .''எல்லாருக்கும் ப்ளம்பிங் வேலை தெரிந்திருக்க வேண்டும்.இது கூட உங்களுக்கு தெரியலையா''னு ஒரு ப்ளம்பர் சொல்ல ஆரம்பிச்சா, "போடா லூசு"னு சொல்லிடுவோம் .

நமக்கு ஹிந்தி தெரியாதுனு வடஇந்தியர்களுக்குத் தெரியும் . நமக்கு தெரிந்த மொழியில் (ஆங்கிலம் ) பேச ஆரம்பித்து விடுவார்கள்.அது நாகரீகம்.அந்த வடநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ,அவருக்கு தெரிந்த சொற்ப ஆங்கிலத்தில் நம்மிடம் பேச ஆரம்பிப்பார் .நகைச்சுவை காட்சி அரங்கேறும் ..புதிய புதிய நட்புகள் உருவாகும். ஆனால் சிலர் வேண்டுமென்றே , புரியாத மொழியில் திட்டினால், ஏன் சிரித்துப் பேசினால் கூட அவமானமாகத்தான் இருக்கும்.நான் பல நாட்கள் அனுபவித்திருக்கிறேன். சிலர் ஒன்று கூடி "கருப்பன் ,மதராசி"னு கிண்டல் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. "Hindustan என்றால் ஹிந்தி தெரிந்தவர்கள் வாழும் நாடு"னு புது விளக்கம் தருவார்கள். "உங்க stateல தான் 'ஹிந்தி வேண்டாம்' னு சொன்னீங்களே, இப்போ எதுக்கு இங்க வறீங்க"னு கேட்பார்கள்.

படிக்காதவர்கள் மட்டுமில்லை,ரொம்ப படித்தவர்களும் இதை செய்வார்கள். அடுத்தவரை அவமானப்படுத்துவதில் அவர்களுக்கு தனி சந்தோஷம் இருக்கும் போல.

"தேர்தல் நேரத்துல 40 சீட்டுக்காக பெரிய பெரிய தலை எல்லாம், எங்க தலைவர்களிடம் கால்ல வந்து விழுறாங்களே, ஏன் ?"னு கேட்க தோணும் . சில நேரத்துல, "எங்கள பிரிச்சு விட்டுடுங்க"னு சொல்லத்தோணும். வேண்டாம். இந்தியா.இந்தியா.இந்தியர்கள். நாம் இந்தியர்கள். ம்ம் .. ஆனால் இந்த பணிப்பெண், வயதில் இளையவர்...நிச்சயம் இவருக்கு மொழி பிரச்சனை பற்றியோ, அரசியலோ தெரிந்திருக்க வாய்ப்பிலை.

ஹிந்தி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் தான்.அதற்காக ஹிந்தி தெரியாதது குறைபாடு இல்லையே. பைக் ஓட்ட தெரிந்து கொள்வது அவசியம் தான்.அதுக்காக,பைக் ஓட்ட தெரியாத ஒருவர் அவசரத்துக்கு lift கொடுங்கனு கேட்டா, "பைக் ஓட்ட தெரியாதா?…ஹி ஹி ஹி... இது கூட தெரியாதா?" னு நக்கல் செய்வதும், "இப்பொழுதே நீ வண்டி ஓட்ட வேண்டும்" .'இப்பொழுதே' னு கட்டாயப்படுத்துவதும் சரியா ? தேவை இருந்தால் அவராகவே 15 நாட்களில் வண்டி ஓட்ட கற்றுக் கொள்வார்.முடிந்தால் பைக் ஓட்ட சொல்லிக் கொடுங்கள்..சும்மா அடுத்தவங்களை ஓட்டாதீர்கள்.

விமானத்தை விட்டு இறங்கும் போது, விமானி எல்லாருக்கும் நன்றி சொல்வார்.அவரிடம் இந்த பிரச்சனையை சொன்னேன்.
அவரது பதில்: "ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு விமானத்திற்க்கும் தனித்தனியே ஒருவரை நியமிக்க முடியாது."
நானும் விடாமல்,"மற்ற மாநிலத்தவர்களுக்கு ஹிந்தி தெரியும்.தமிழ்நாட்டில் அப்படி இல்லையே? நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று பாருங்கள்.புரியும்"னு பதிலளித்தேன். "Logistics பிரச்சனை.கவனிக்கிறோம்"னு மழுப்பினார்.

ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு விளம்பரம் செய்யும் பொழுதே, இந்த இந்த மொழி தெரிந்தவர்களுக்கு தான் முன்னுரிமை னு தெரிவிச்சா என்ன ? அதில் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாமே. அவங்களுக்கு தேவை வெறும் அழகு (வெள்ளை) . ஏன் தமிழ்நாட்டில் அப்படி யாரும் 'அழகு' இல்லையா ?

'அவர்'களுக்கு தில் இருந்தா,சென்னை சென்ட்ரலில் ,ஒரே ஒரு நாள், தமிழை தவிர்த்து வெறும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அறிவிப்பு செய்யட்டும் பார்க்கலாம்.

சென்னை விமான நிலையத்தில் புகார் செய்தேன் . என்னை 'பிரிவினை வாதி' ,'மொழி வெறியன்' 'திராவிட அரசியல் பேசுகிறான்'னு சிலர் திட்ட ஆரம்பிப்பார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் தமிழை வளர்க்க வந்தவன் கிடையாது.என்னால் அது முடியாது.இலக்கியம் இலக்கணம் எதுவும் தெரியாது.

என் அருகில் இருப்பவர் அவமானப்படுகிறார் .கோபம் வந்தது ..உதவினேன். 'இது மறுமுறை நிகழக்கூடாது' னு எண்ணி ஒரு சின்ன புகார் செய்தேன். மற்றும் ஒரு email அனுப்பினேன். அவ்வளவே. இது கூட செய்யலைனா


இப்படியும் இருக்காங்கப்பா...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக