பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 14 மே, 2015

கிளிமஞ்சாரோ !!!

கிளிமஞ்சாரோ என்பது, ஆப்ரிக்க நாட்டில் உள்ள தன்சானியாவில் அமைந்துள்ள பனி பொதிந்த ஒரு உயரமான மலைத் தொடர் ஆகும். இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த கீபோ, மாவென்ஸி, மற்றும் ஷிரா என்ற மூன்று ஆக்ரோஷமான எரிமலைகளின் எச்சங்கள் தான், கிளிமஞ்சாரோ மலைத்தொடர். ஷிரா மற்றும் மாவென்ஸி மலைகள் இறந்த எரிமலைகளாக கருதப்படுகின்றன. ஆனால், கீபோ மலையோ உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை ஆகும். எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது.


இந்த கீபோ மலைத்தொடரில் தான், ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான உஹுரு உள்ளது. பளபளக்கும் மலை என்று செல்லமாக அழைக்கப் படும் கிளிமஞ்சாரோ மலை, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும். ஒரு எல்லைக்கு அப்பால், மலை ஏறுபவர்களை பேய் பிசாசுகள் கொன்று விடும் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுவதால், காட்டு வாசிகளும் இந்த மலை ஏற தயங்குகின்றனர், என்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் !

ஆனாலும், மனிதர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கண்டிப்பாக பலன் தரும் அல்லவா ? ஹான்ஸ் மேயர் என்ற ஜெர்மானியரும், ப்ருஷ்ஷேல்லர் என்ற ஆஸ்திரியரும், பல தடைகளைத் தாண்டி, 1889 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கீபோ மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.

தற்போது இங்கு மலை ஏறும் துணிகரமான பயிற்சி அளிக்கப் பட்டாலும், மலை ஏறும் போது நேரும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகம் ஆகும். இதற்கு காரணம், கிளிமஞ்சாரோவின் செங்குத்தான மலைப்பாங்கும், வழுக்கும் ஐஸ் பாறைகளும் ஆகும்.

 ஆப்ரிக்காவில் வாழும் 'பண்ட்டு' இனத்தவரின் மொழி 'ஸ்வாஹிலி' ஆகும். இந்த மொழியில் ‘கிளிம’ என்றால் மலை என்றும் ‘ஞ்சரோ’ என்றால் உயர்ந்த என்றும் பொருள் படும். அதாவது, கிளிமஞ்சாரோ என்றால், உயர்ந்த மலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

                                                    நன்றி இணையம்