பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 நவம்பர், 2022

ஏதாவது ஒரு வேல செய்யணும்.

     எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது.

    எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த அனைவருக்குமே பொதுவா இருக்க கூடிய வரக்கூடிய ஒரு விஷயம். நம்மள பலபேர் என்ன பண்ணுவோம்னா அதுக்கு  அப்பறம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே போறபோக்குல வாழ்ந்துடுவோம். நமக்குன்னு எதுவும் பண்ணிக்க மாட்டோம். நம்ம உள் அழகையோ  வெளி அழகையோ  பொருட்படுத்தமாட்டோம். பலபேருக்கு அதான் பிள்ளைங்களை பெத்தாச்சு இல்ல அப்பறம் என்ன இனி நமக்குனு தனியா பாத்துக்கனு இருந்துடுவோம். அதே வகையில தான் நம்முடைய கரியர்-யும் . பிள்ளைங்களை பாக்கணும் பிள்ளைங்களை பாக்கணும்னு நம்ம கரியர் அப்டியே போகிடும். அஞ்சு வருஷம் ஆறு வருஷம் கழிச்சு திரும்பி பாக்கும்போது நமக்கு யாரும் வேல குடுக்க முன் வரமாட்டாங்க.நம்ம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால கூட பலபேர் லைஃப் அப்டியே போயிடும்.

    நான் கேக்குறது எல்லாம் , படிச்ச படிப்புக்கு மட்டும் தான் வேலை செய்வேன்னு நினைக்காம , சின்ன வேலையா இருந்தாலும் எதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கணும். முதல் அடி எடுத்துவச்சா கண்டிப்பா நம்முடைய குறிக்கோளுக்கு நம்மை  கொண்டு சேக்கும் நம்முடைய முயற்சி. எந்த வேலைய செஞ்சாலும் திருப்தியோட சந்தோஷமா செய்யணும்.அதுல இருந்து அடுத்து படி ஏறி போகணும். இனிமே என்னனு சும்மா உக்காந்து இருக்குறதுக்கு ஒரு வேலனு ஒன்னு பண்ணினா நம்முடைய உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. நம்ம மேல நமக்கே confident வரும். நம்ம மேல நமக்கே மரியாதை வரும்.    

    நான் blogger , youtuber ,என் friend -டோட நாவலுக்கு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். painting கத்துக்கிறேன் , வீடு கணவன் ,home maker -ஆ இருக்கேன்(அது சாதாரண வேலை இல்ல) ஆனா அதுக்கும் மேல ஏதாவது சம்பாதிக்கிற மாதிரியான ஒரு வேலை பண்ணணுமே....

    இந்த மாதிரி யோசிச்சுதான் நான் இங்க டிரைவர் வேலைக்கு சேந்தேன். நம்ம ஊருல  ஊபர் மாதிரி இங்க வேற சில கம்பெனிகள் இருக்கு. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி உன்னால இத செய்ய முடியும் உனக்கும் பிடிச்ச வேல , எவ்வளவு நேரம் செய்யணும்னு நினைக்கிறியோ  அவ்வளவு நேரம் செய் உனக்கும் ரிலாக்ஸ் -ஆ இருக்கும். ஒரு experiance கிடைக்கும் அது இதுனு என்ன பிரைன் வாஷ் பண்ணி செய்யவச்சாரு. ஆரம்பத்துல எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது என் கிட்டையே , நிறைய சந்தேகங்கள் இருந்தது என் மேலையே.தயக்கங்கள் இருந்தது. என்னால முடியுமா? நான் ஏன் இத பண்ணனும்?நான் படிச்சது M.phil computer science , அமெரிக்காவுல இதுக்கு பேர் டபுள் மாஸ்டர்ஸ். இங்கலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? அதுமட்டும் இல்லாம நம்ம ஊருலதான் கவுரவம் கவுரவம்-னு நாம எல்லாரும் காலை மதியம் இரவு உணவோட கவுரவத்தையும் சேத்து மூளைக்கு சாப்பாடா கொடுத்துக்கிட்டு இருக்கோமே. அந்த சூழ்நிலையிலதான் நானும் வளந்தேன். அப்போ எனக்கும் அது மண்டையில ஊறிபோயித்தானே இருக்கும். அப்போ நான் படிச்ச படிப்பை விட மத்த வேலை செய்ய எனக்கு மனசு வரல. யோசிக்குறேன், யோசிக்கிறேன், ரொம்ப யோசிக்கிறேன்.நம்ம ஏன் செய்யணும்னு முதல்ல  யோசிச்சேன், நம்ம செய்யணுமானு அப்பறம்  யோசிச்சேன், அப்பறம் நம்மால செய்ய முடியுமானு யோசிச்சேன். அடுத்து சரி போ செஞ்சிதான் பாப்போமேனு யோசிச்சேன்.

    முதல்ல டிரைவர் வேலை செய்ய ஆரம்பிச்சபோது நிறைய தடு மாற்றம் இருந்தது. ரூட் தெரியாது.தப்பான ரூட் போய்டுவேன். அந்தமாதிரிலாம் இருந்தது . அப்பறம் போக போக பிக்கப் பண்ணிக்கிட்டேன். இந்த வேலையில என்ன வசதினா எப்ப வேணும்னாலும் ஆன்லைன் போயிக்கிலாம்  , ride பிக்கப் பண்ணிக்கலாம். எப்போ வேணும்னாலும் offline  போயிக்கிலாம்.இவ்வளவு நேரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இத்தனை நாள் பண்ணனும்னு அவசியம் இல்ல. எல்லாமே நம்முடைய இஷ்டம் தான். அந்த வகையில எனக்கு ரொம்பவே வசதியா இருந்தது. 

    நான் ஒரு நாளைக்கு குறைஞ்சது 1.30 மணி நேரம் ride எடுப்பேன். அதிகமா 3.30 மணி நேரம் ride எடுப்பேன். என் பொண்ணு எனக்காக காத்துக்கிட்டு இருப்பா வீட்ல அதனால 3.30 மணிநேரம் மேல நானும் வீட்டுக்கு வந்துடுவேன்.காலைல சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்புவேன். அப்படி இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சு 4 மாசம் ஆகுது.இன்றோடு என்னோட 200வது ரைடு முடிச்சிருக்கேன். இந்த வேலை செஞ்சாலும் என்னுடைய படிப்புக்கான வேலையும் தேடிக்கிட்டே தான் இருந்தேன். என்னுடைய friend உதவியால நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சிருக்கு இப்போ. 

    இந்த 4 மாசத்துல 200 ride -கள்.எல்லாம் 5 ஸ்டார் review-ல். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாள் சூப்பர்-ஆ இருக்கும்.சில நாள் சுமாரா இருக்கும்.கிட்டத்தட்ட 220 புது மக்களை பாத்துருப்பேன்.220 புது மனுஷங்கக்கிட்ட பேசிருப்பேன் பழகிருப்பேன். ஒரு ஒருத்தங்களும் வித்யாசமானவங்க. சிலபேர் நல்லா பேசுவாங்க ,சிலபேர் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாங்க. சில பேர் கேள்வியெல்லாம் கேப்பாங்க, சில பேர் நா கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவாங்க. சில பேர் அவசர அவசரமா வேலைக்கு போவாங்க. சில பேர் அப்பாடா என் வீட்டுக்கு போய் என்னுடய சோஃபா-ல தலையை வைக்கணும்னு சொல்லி அவ்வளவு சோர்ந்து வருவாங்க. விடிய காலைல வேலைக்கு போறவங்களையும் கொண்டுபோய் விட்டுருக்கேன், லேட் நைட் வீட்டுக்கு வேலையில இருந்து திரும்பி வர்றவங்களையும் கொண்டு போய் வீட்ல விட்ருக்கேன். சில பேர் எனக்கு வேலைக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.சில பேருக்கு வேலைக்கு நான் டிப்ஸ் தந்துருக்கேன்.இங்க வேலை இருக்கு. இந்த கோர்ஸ் பண்ணு, இந்த வேலை ட்ரை பண்ணலாம்னு suggest பண்ணுவாங்க. சில பேர் சந்தோஷமா சிரிச்சுகிட்டே வருவாங்க.சில பேர் சோகமா வெளில வெறிக்க பாத்துக்கிட்டே வருவாங்க. சில பேர் சந்தோஷமா டிப்ஸ் (பணம்) குடுப்பாங்க. இப்படி எவ்வளவு வித்யாசமான மனுஷங்களை சந்திச்சேன், பேசினேன் .

    இந்த வேலை மூலமா தெரியாத ரூட் தெரிஞ்சுக்கிட்டேன், எத்தனையோ தெரு பேர்களை தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ அழகான community -களை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எவ்வளவோ அழகான வீடுகளையும் வீடு இருக்குற இடங்களையும் பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எந்த வேலையும் ஈஸி இல்லனு தெரிஞ்சுகிட்டேன். எந்த வேலையும் குறைவான வேலை இல்லனு தெரிஞ்சுக்கிட்டேன்.எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு அழகான புது அனுபவம் இந்த வேலை எனக்கு குடுத்தது. 

    இந்த அனுபவம் கிடைக்க காரணம் என்னுடைய கணவர் தான். என்னைவிட என் மேல நம்பிக்கை வச்சு உன்னால  முடியும் செய்னு என் பின்னாடி இருந்து என்ன எப்பவுமே முன்னாடி தள்ளுற இந்த மாதிரி ஒரு ஆண் எல்லா பெண்ணுக்கும் பின்னாடி ஒரு comrade -ஆ இருக்கணும். 

வியாழன், 20 அக்டோபர், 2022

ரசிகன் ரசிகன்னு சொல்றாங்க நிஜமாவே மதிக்குறாங்களா ?

 ரொம்ப நாளா ஒரு விஷயம் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. நமக்கு பிடிச்ச ஹீரோ ஹீரோயின் திரையில வரும்போது நாம கொண்டாடுறோம். 

நமக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடிக்கிறது தப்பில்ல.ஆனா எதுக்காக இந்த பால் அபிஷேகம்  பழ அபிஷேகம் பண்ணனும்?எதுக்காக 10 அடில கட்டவுட் வைக்கணும்? நிஜமான ஒரு விஷயத்தை நாம கவனிக்கிறோமா? இப்படி அபிஷேகம் கட்டவுட்,முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் 1000 ரூபாயா இருந்தாலும் போய் பாக்குறது இப்படி நாம  எல்லாம்பண்றோம்..உங்க அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துறீங்க ,சரிதான். ஆனா இதுலாம் செய்றவங்கள்ல  எத்தனை பேருக்கு சொந்தமா ஒரு பைக்கு கூட இல்ல ? எத்தனை பேர் இன்னும் ஷேர் ஆட்டோல போயிட்டு வந்துகிட்டு இருக்கீங்க.எத்தனை பேர் இன்னும் பஸ்ல தொங்கிக்கிட்டு பயணம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.ஆனா நீங்க கட்டவுட் வைக்குறவங்க  audi கார், பென்ஸ் கார் -னு வளர்ந்து போய்கிட்டே இருக்காங்க. நாம இன்னும் தொங்கிக்கிட்டு தான் பயணம் பண்றோம். 

நடிக்கிறது அவங்க தொழில். ஆனா நாம ஏன் அதை ரொம்ப பெரிய விஷயமா கொண்டாடுறோம்னு தெரியல.  ஒரு விஷயம் என்ன ரொம்பவே யோசிக்க வச்சது என்னனா, ஒரு நடிகரை அல்லது நடிகையை பாக்குறோம் பொது இடத்துல,  அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்க ஆசைப்படுறோம்  எத்தனை நடிகர் அல்லது நடிகைகள் ஒரு நிமிஷம் நின்னு போட்டோ எடுக்குற உங்க பேரை கேக்குறாங்க? அல்லது எப்படி  இருக்கிறீங்கனு கேக்குறாங்க? அல்லது போட்டோ எடுத்ததுக்கு அப்பறம் ஒரு தேங்க்ஸ் சொல்றாங்க. (தேங்க்ஸ் அவங்க ஏன் சொல்லணும்னு நினைக்காதீங்க, ரசிகர்கள் இல்லைனா அவங்க படம்உம ஓடாது, காசும் கிடைக்காது.சோ தேங்க்ஸ் சொல்லணும்.மேடை மேடையா  ஏறினா மட்டும் தேங்க்ஸ் சொல்றாங்க இல்ல.ரசிகர்களுக்கு நன்றி அது அந்த போட்டோ எடுக்கும் போதும் இருக்கணும்.)சொல்லுங்க பாப்போம். மேடை ஏறினா மட்டும் உங்களால தான் நான் இங்க இருக்கேன். உங்களால தான் நான் வளந்துருக்கேன் ,நீங்க இல்லைனா நான் இல்ல , நீங்கதான் காரணம் அப்பப்பப்பா இன்னும் என்னனென்னவோ சொல்றாங்க. ஆனா நேர்ல ஒரு ரசிகனை அல்லது  ரசிகையை பார்க்கும்போது அந்த சந்தோசம் அவங்க முகத்துல இல்லையே.ஏதோ அவங்க நேரத்தை நாம வீணாக்குறமாதிரியும் , ஒரு தொந்தரவாக நாம இருக்குறமாதிரியும் behave பண்றாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சார்,இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரசிகனை பாத்தா  அவன் பக்கத்துல வந்து போட்டோ எடுத்தா சிரிச்சுக்கிட்டு ,எடுத்ததும் இப்பையும் தேங்க்ஸ் சொல்றாரு. ஹலோ சொல்றாரு. சியான்  விக்ரம்  சார், இப்பவரைக்கும் நின்னு சிரிச்சு பேசி போட்டோக்கு போஸ் கொடுத்து தேங்க்ஸ் சொல்லி நல்லா இருக்கீங்களானு கேக்குறார். விஜய்சேதுபதி சார்,பல  படி மேல போய் கூட்டத்தோட கூட்டமாய் நின்னு இன்னும் சொல்லப்போனா ரசிகனுக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு இருக்குறார். ஆனா இவங்கள தவிர எத்தனை பேரை நீங்க சொல்லுவீங்க ரசிகர்கள் கிட்ட அவங்களை  தொல்லையா நினைக்காம, அவங்க அன்பை  பாக்குறது? சொல்லுங்க.

ஆனா ரசிகர்கள்னு நாம பண்றதும் சில அட்டூழியத்தனம் தானே, என்னதான் நாம ஒரு நடிகையின் ரசிகரா இருந்தாலும் அவங்களை பாக்கும்போது எல்லை மீறி நடக்க முயற்சி பண்றது ஒரு பெண்ணை தொட்டுப் பாக்க முயற்சி பண்றது(இது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் தான். ஒருவரோடு சம்மதம் இல்லாம அவங்கள மேல விரல் கூட படக்கூடாது.அவங்க permission-னோட handshake பண்றது,hug பண்றது தப்பு இல்ல)இதுலாம் நாம பண்ற அசிங்கம் தானே. அவங்க எப்படி நடிச்சா என்ன ?அது தொழில் .அவங்களுடைய தொழில். வேலை. எல்லா வேலையும் மாதிரி நடிப்பும் ஒரு வேலைதான். அதைத்தான் அவங்க பண்றாங்க . அதுக்காக தொடணும் தொட்டுப்பாக்கணும்னு(அவங்க சம்மதம் இல்லாம) நினைக்கும்போது நம்முடைய சுய மரியாதையை நாம அங்க இழக்குறோம்னு கூட நாம உணர்வது  இல்ல.

நிஜமாவே அவங்களை நமக்கு பிடிச்சிருந்தா , அடடே என் ரசிகரா இவங்க, இந்த நல்லது பண்ணிருக்காங்களா? இந்த சாதனை பண்ணிருக்காங்களா அவங்க நா பாக்கணுமேனு அந்த நடிகர் நடிகை நினைக்குற அளவுக்கு நாம வரவேண்டாமா? (அப்படியெல்லாம் பண்ணிட்டா நா செலிபிரிட்டி ஆகிடுவேனேனு நினைக்காதீங்க) அல்லது அவங்களை மீட் பண்ணும்போது நீங்க என்ன பண்றீங்கன்னு ஒரு வேல அவங்க கேக்கும்போது நம்ம மேல மத்தவங்களுக்கு மரியாதை வரமாதிரியான  ஒரு இடத்துல நாம இருக்கவேண்டாமா? 

என்னைக்குதான் நாம மாறுவோம்? என்னைக்குதான் நாம திருந்துவோம். அவங்க நின்னா நியூஸ், நடந்தா நியூஸ், தும்மினா நியூஸ், இருமினா  நியூஸ்னு அவங்கள சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குற இந்த மீடியாவை சொல்றதா இல்ல முதல் வேலையா அந்த வீடியோவை பாத்து அவங்களுக்கு அதுலயும் காசு சம்பாதிச்சுக்குடுக்குற நம்மாலதானே இந்த மாதிரி நியூஸ் ரீச் ஆகுது , சோ நம்மள சொல்றதா?

இவங்களும் நார்மல் மனிதர்கள் தான்னு அவங்கள கொஞ்சம் கண்டுக்காம விட்டுட்டோம்னாலே எல்லாம் சரியாகிடும். அவங்களுக்கும் நம்ம மேல மதிப்பு வரும் நமக்கும் மாயை மோகம் தீரும் .ஆனா அது என்னைக்குதான்னு தெரியல .


உலகம் முழுக்க இப்படித்தான் இருக்கு.



திங்கள், 17 அக்டோபர், 2022

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

                 

                 நான் படித்து வளர்ந்தது அனைத்தும் நமது நாட்டில்.தமிழ் நாட்டில். எனது சொந்த ஊர் விருத்தாச்சலம் . நான் படித்தது தமிழ் நாட்டு மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் கல்லூரிகளில்.அரசு பள்ளியிலும் படித்தேன் தனியார் பள்ளியிலும் படித்தேன். நான் படித்த பொழுது நான் எதிர்கொண்ட  முதல் பிரச்னை கழிப்பறை வசதி. 

                அரசு பள்ளியில் படிக்கும் போது கழிப்பறைகள் சுத்தம் செய்யவே மாட்டார்கள்.அதனால் நாங்கள் எங்கள் பள்ளிக்கு பின்புறம்  சிறுது தூரம் நடந்துசென்று அங்கு  இருக்கும் மறைவான காட்டு செடிகளின் அருகில் பயன்படுத்திவிட்டு வருவோம். இதுதான் நான் படித்த  5 வருடங்களாக அங்கு நாங்கள் பின் பற்றியது. 

               அதன் பின் நான் இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் படிக்க தொடங்கினேன். அங்கும் கழிவறைகள் சுத்தமாக இருக்காது. அரசு பள்ளியிலாவது பின்புறம் காட்டுப்பகுதி இருந்தது ஆனால் தனியார் பள்ளியில் அதுவும் இல்லை. சுத்தமாக இல்லாத காரணத்தினால் கழிவறைகளை அநேகபேர் பயன்படுத்தவே மாட்டோம். நினைத்து பாருங்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை நாங்கள் கழிவறை  பக்கம் கூட செல்லமாட்டோம். இது எங்களுக்கு உடலளவில் எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்திருக்கும் என்று சற்று நினைத்துப்பாருங்கள். அதுவும் மாதவிடாய் காலங்களில் நாங்கள் படும் அவஸ்தைக்கு அளவே இருந்திருக்காது.அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

              நான் படித்து முடித்து பல வருடங்கள் ஆகின்றதுதான். ஆனால் இன்றும் பல தனியார் பள்ளிகளிலும் முக்கியமாக அரசு பள்ளிகளிலும் பிள்ளைகள் எதிர் கொள்ளும் முதல் பிரச்சனை கழிவறை வசதியாகத்தான் இருக்கின்றது. என் அண்ணன் மகள் தனியார் பள்ளியில் படித்தாள் . அவள் கழிவறை சுத்தமாக இல்லாத  காரணத்தினால் அந்த பக்கமே செல்ல மாட்டாள். விளைவு அவளுக்கு constipation தொல்லை வந்தது. அப்போது நான் யோசித்தேன் , நான் படிக்கும் போதும் பள்ளிகளில் இதே பிரச்சனை அடுத்த தலைமுறை படிக்கும் போதும் இதே பிரச்சனையா என்று. இது மிகவும் வேதனை அளிக்கின்றது.

               இதற்க்கு பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.ஏன் என்றால் , குழந்தையிலேயே அவர்களுக்கு தன்னுடைய சுய சுத்தத்தை சொல்லித்தரவில்லை என்றே நான் சொல்வேன். சுத்தம் செய்பவர்களும் மனிதர்கள் தானே.  பிள்ளைகளை வளர்க்கும் போதே வீட்டில் இருந்தே அந்த சுத்தம் வரவேண்டும் அல்லவா? பிள்ளைகளும் ஒரு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் வீடாக இருந்தாலும் வெளியிடமாக இருந்தாலும் தன் பிறகு மற்றவர் அதை பயன்படுத்த வேண்டுமே அதற்காக நாம் சுத்தமாக விட்டு செல்லவேண்டும் என்று ஒரு சிறிய basic knowledge என்று சொல்வார்களே அதை  கற்றுக்கொள்ள வேண்டும் .அதை கற்றுத்தர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. அதை அவர்களும் சரியாக பிள்ளைகளுக்கு சொல்லித்தரவேண்டும்.பிள்ளைகளும் பின்பற்றவேண்டும். அப்போது சுத்தம் செய்பவர்களும்அறுவருப்பு  படாமல் சுத்தம் செய்வார்கள். 

                 நான் அமெரிக்காவில் தற்போது வசிக்கிறேன். எனது குழந்தைகள் இங்கிருக்கும் பள்ளியில் படிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள கல்வி முறையும் இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் வேறு வேறு .அனால் நான் இங்கு பிள்ளைகளின் கல்வி பற்றி பேச வரவில்லை. அனால் இங்கு பிள்ளைகளுக்கு மூன்று  வருடங்களில் இருந்தே கழிவறைகளை சரியான முறையில் உபயோகப்படுத்த  கற்றுக்கொருக்கிறார்கள். அதை சுத்தமாக வைத்திருக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அதை உபயோகப்படுத்தியபின் கைகளை சுத்தமாக கழுவ கற்றுக்கொடுக்கிறார்கள். இங்கு என் பிள்ளைகள் நான் பட்ட அவஸ்தையை படவில்லை. நாங்களும் எங்களது கடமையை கற்றுக்கொடுத்துள்ளோம்.அவர்களும் பின்பற்றுகிறார்கள் . எந்த அருவருப்பும் இல்லாமல் இங்கு நிம்மதியாக உபயோகிக்கிறார்கள்.

                மாற்றம் ஒருவரிடம் இருந்து மட்டும் வராது . அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே ஆரோக்கியமான சுத்தமான தலைமுறையை உருவாக்க முடியும். இதற்கு கண்டிப்பான சட்டமும் தேவை படுகிறது. நமது நாட்டில் எத்தனை பள்ளிகளில் இன்றும் அசுத்தமான கழிவறைகள்  உள்ளது என்று தெரியுமா.எத்தனை பிள்ளைகள் இன்றும் காலை முதல் மாலை வரை அந்த பக்கமே செல்லாமல் தங்கள் உடலை வீணாக்கி கொள்கின்றனர் என்று தங்களுக்கு தெரியுமா.? இப்போது நாம்  பள்ளிகளை பற்றியும்  கல்வி முறையை பற்றியும் வாதிடுக்கின்றோம்  பேசுகின்றோம் விமர்சிக்கின்றோம் ஆனால் அடிப்படை வசதி இல்லை என்பதை மறந்துவிட்டோம்.  தயவு  கூர்ந்து ,   பள்ளி படிக்கும் பிள்ளைகளின் முதல் பிரச்சனையான இந்த கழிவறை பிரச்சனையை  தீர்த்து வைக்குமாறு தங்களை மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேலை தாங்கள் அதற்கான சட்டத்தை முன்னரே இயற்றியிருந்தால் அது சரியாக கவனிக்கப்படுகிறதா என்று உறுதி படுத்துங்கள்.கடுமையான சட்டம் தேவை. அது வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.



நன்றி

ஸ்ரீவித்யா கோவிந்தராஜ்