பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 நவம்பர், 2022

ஏதாவது ஒரு வேல செய்யணும்.

     எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது.

    எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த அனைவருக்குமே பொதுவா இருக்க கூடிய வரக்கூடிய ஒரு விஷயம். நம்மள பலபேர் என்ன பண்ணுவோம்னா அதுக்கு  அப்பறம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே போறபோக்குல வாழ்ந்துடுவோம். நமக்குன்னு எதுவும் பண்ணிக்க மாட்டோம். நம்ம உள் அழகையோ  வெளி அழகையோ  பொருட்படுத்தமாட்டோம். பலபேருக்கு அதான் பிள்ளைங்களை பெத்தாச்சு இல்ல அப்பறம் என்ன இனி நமக்குனு தனியா பாத்துக்கனு இருந்துடுவோம். அதே வகையில தான் நம்முடைய கரியர்-யும் . பிள்ளைங்களை பாக்கணும் பிள்ளைங்களை பாக்கணும்னு நம்ம கரியர் அப்டியே போகிடும். அஞ்சு வருஷம் ஆறு வருஷம் கழிச்சு திரும்பி பாக்கும்போது நமக்கு யாரும் வேல குடுக்க முன் வரமாட்டாங்க.நம்ம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால கூட பலபேர் லைஃப் அப்டியே போயிடும்.

    நான் கேக்குறது எல்லாம் , படிச்ச படிப்புக்கு மட்டும் தான் வேலை செய்வேன்னு நினைக்காம , சின்ன வேலையா இருந்தாலும் எதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கணும். முதல் அடி எடுத்துவச்சா கண்டிப்பா நம்முடைய குறிக்கோளுக்கு நம்மை  கொண்டு சேக்கும் நம்முடைய முயற்சி. எந்த வேலைய செஞ்சாலும் திருப்தியோட சந்தோஷமா செய்யணும்.அதுல இருந்து அடுத்து படி ஏறி போகணும். இனிமே என்னனு சும்மா உக்காந்து இருக்குறதுக்கு ஒரு வேலனு ஒன்னு பண்ணினா நம்முடைய உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. நம்ம மேல நமக்கே confident வரும். நம்ம மேல நமக்கே மரியாதை வரும்.    

    நான் blogger , youtuber ,என் friend -டோட நாவலுக்கு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். painting கத்துக்கிறேன் , வீடு கணவன் ,home maker -ஆ இருக்கேன்(அது சாதாரண வேலை இல்ல) ஆனா அதுக்கும் மேல ஏதாவது சம்பாதிக்கிற மாதிரியான ஒரு வேலை பண்ணணுமே....

    இந்த மாதிரி யோசிச்சுதான் நான் இங்க டிரைவர் வேலைக்கு சேந்தேன். நம்ம ஊருல  ஊபர் மாதிரி இங்க வேற சில கம்பெனிகள் இருக்கு. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி உன்னால இத செய்ய முடியும் உனக்கும் பிடிச்ச வேல , எவ்வளவு நேரம் செய்யணும்னு நினைக்கிறியோ  அவ்வளவு நேரம் செய் உனக்கும் ரிலாக்ஸ் -ஆ இருக்கும். ஒரு experiance கிடைக்கும் அது இதுனு என்ன பிரைன் வாஷ் பண்ணி செய்யவச்சாரு. ஆரம்பத்துல எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது என் கிட்டையே , நிறைய சந்தேகங்கள் இருந்தது என் மேலையே.தயக்கங்கள் இருந்தது. என்னால முடியுமா? நான் ஏன் இத பண்ணனும்?நான் படிச்சது M.phil computer science , அமெரிக்காவுல இதுக்கு பேர் டபுள் மாஸ்டர்ஸ். இங்கலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? அதுமட்டும் இல்லாம நம்ம ஊருலதான் கவுரவம் கவுரவம்-னு நாம எல்லாரும் காலை மதியம் இரவு உணவோட கவுரவத்தையும் சேத்து மூளைக்கு சாப்பாடா கொடுத்துக்கிட்டு இருக்கோமே. அந்த சூழ்நிலையிலதான் நானும் வளந்தேன். அப்போ எனக்கும் அது மண்டையில ஊறிபோயித்தானே இருக்கும். அப்போ நான் படிச்ச படிப்பை விட மத்த வேலை செய்ய எனக்கு மனசு வரல. யோசிக்குறேன், யோசிக்கிறேன், ரொம்ப யோசிக்கிறேன்.நம்ம ஏன் செய்யணும்னு முதல்ல  யோசிச்சேன், நம்ம செய்யணுமானு அப்பறம்  யோசிச்சேன், அப்பறம் நம்மால செய்ய முடியுமானு யோசிச்சேன். அடுத்து சரி போ செஞ்சிதான் பாப்போமேனு யோசிச்சேன்.

    முதல்ல டிரைவர் வேலை செய்ய ஆரம்பிச்சபோது நிறைய தடு மாற்றம் இருந்தது. ரூட் தெரியாது.தப்பான ரூட் போய்டுவேன். அந்தமாதிரிலாம் இருந்தது . அப்பறம் போக போக பிக்கப் பண்ணிக்கிட்டேன். இந்த வேலையில என்ன வசதினா எப்ப வேணும்னாலும் ஆன்லைன் போயிக்கிலாம்  , ride பிக்கப் பண்ணிக்கலாம். எப்போ வேணும்னாலும் offline  போயிக்கிலாம்.இவ்வளவு நேரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இத்தனை நாள் பண்ணனும்னு அவசியம் இல்ல. எல்லாமே நம்முடைய இஷ்டம் தான். அந்த வகையில எனக்கு ரொம்பவே வசதியா இருந்தது. 

    நான் ஒரு நாளைக்கு குறைஞ்சது 1.30 மணி நேரம் ride எடுப்பேன். அதிகமா 3.30 மணி நேரம் ride எடுப்பேன். என் பொண்ணு எனக்காக காத்துக்கிட்டு இருப்பா வீட்ல அதனால 3.30 மணிநேரம் மேல நானும் வீட்டுக்கு வந்துடுவேன்.காலைல சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்புவேன். அப்படி இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சு 4 மாசம் ஆகுது.இன்றோடு என்னோட 200வது ரைடு முடிச்சிருக்கேன். இந்த வேலை செஞ்சாலும் என்னுடைய படிப்புக்கான வேலையும் தேடிக்கிட்டே தான் இருந்தேன். என்னுடைய friend உதவியால நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சிருக்கு இப்போ. 

    இந்த 4 மாசத்துல 200 ride -கள்.எல்லாம் 5 ஸ்டார் review-ல். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாள் சூப்பர்-ஆ இருக்கும்.சில நாள் சுமாரா இருக்கும்.கிட்டத்தட்ட 220 புது மக்களை பாத்துருப்பேன்.220 புது மனுஷங்கக்கிட்ட பேசிருப்பேன் பழகிருப்பேன். ஒரு ஒருத்தங்களும் வித்யாசமானவங்க. சிலபேர் நல்லா பேசுவாங்க ,சிலபேர் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாங்க. சில பேர் கேள்வியெல்லாம் கேப்பாங்க, சில பேர் நா கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவாங்க. சில பேர் அவசர அவசரமா வேலைக்கு போவாங்க. சில பேர் அப்பாடா என் வீட்டுக்கு போய் என்னுடய சோஃபா-ல தலையை வைக்கணும்னு சொல்லி அவ்வளவு சோர்ந்து வருவாங்க. விடிய காலைல வேலைக்கு போறவங்களையும் கொண்டுபோய் விட்டுருக்கேன், லேட் நைட் வீட்டுக்கு வேலையில இருந்து திரும்பி வர்றவங்களையும் கொண்டு போய் வீட்ல விட்ருக்கேன். சில பேர் எனக்கு வேலைக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.சில பேருக்கு வேலைக்கு நான் டிப்ஸ் தந்துருக்கேன்.இங்க வேலை இருக்கு. இந்த கோர்ஸ் பண்ணு, இந்த வேலை ட்ரை பண்ணலாம்னு suggest பண்ணுவாங்க. சில பேர் சந்தோஷமா சிரிச்சுகிட்டே வருவாங்க.சில பேர் சோகமா வெளில வெறிக்க பாத்துக்கிட்டே வருவாங்க. சில பேர் சந்தோஷமா டிப்ஸ் (பணம்) குடுப்பாங்க. இப்படி எவ்வளவு வித்யாசமான மனுஷங்களை சந்திச்சேன், பேசினேன் .

    இந்த வேலை மூலமா தெரியாத ரூட் தெரிஞ்சுக்கிட்டேன், எத்தனையோ தெரு பேர்களை தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ அழகான community -களை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எவ்வளவோ அழகான வீடுகளையும் வீடு இருக்குற இடங்களையும் பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எந்த வேலையும் ஈஸி இல்லனு தெரிஞ்சுகிட்டேன். எந்த வேலையும் குறைவான வேலை இல்லனு தெரிஞ்சுக்கிட்டேன்.எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு அழகான புது அனுபவம் இந்த வேலை எனக்கு குடுத்தது. 

    இந்த அனுபவம் கிடைக்க காரணம் என்னுடைய கணவர் தான். என்னைவிட என் மேல நம்பிக்கை வச்சு உன்னால  முடியும் செய்னு என் பின்னாடி இருந்து என்ன எப்பவுமே முன்னாடி தள்ளுற இந்த மாதிரி ஒரு ஆண் எல்லா பெண்ணுக்கும் பின்னாடி ஒரு comrade -ஆ இருக்கணும். 

வியாழன், 20 அக்டோபர், 2022

ரசிகன் ரசிகன்னு சொல்றாங்க நிஜமாவே மதிக்குறாங்களா ?

 ரொம்ப நாளா ஒரு விஷயம் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. நமக்கு பிடிச்ச ஹீரோ ஹீரோயின் திரையில வரும்போது நாம கொண்டாடுறோம். 

நமக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடிக்கிறது தப்பில்ல.ஆனா எதுக்காக இந்த பால் அபிஷேகம்  பழ அபிஷேகம் பண்ணனும்?எதுக்காக 10 அடில கட்டவுட் வைக்கணும்? நிஜமான ஒரு விஷயத்தை நாம கவனிக்கிறோமா? இப்படி அபிஷேகம் கட்டவுட்,முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் 1000 ரூபாயா இருந்தாலும் போய் பாக்குறது இப்படி நாம  எல்லாம்பண்றோம்..உங்க அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துறீங்க ,சரிதான். ஆனா இதுலாம் செய்றவங்கள்ல  எத்தனை பேருக்கு சொந்தமா ஒரு பைக்கு கூட இல்ல ? எத்தனை பேர் இன்னும் ஷேர் ஆட்டோல போயிட்டு வந்துகிட்டு இருக்கீங்க.எத்தனை பேர் இன்னும் பஸ்ல தொங்கிக்கிட்டு பயணம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.ஆனா நீங்க கட்டவுட் வைக்குறவங்க  audi கார், பென்ஸ் கார் -னு வளர்ந்து போய்கிட்டே இருக்காங்க. நாம இன்னும் தொங்கிக்கிட்டு தான் பயணம் பண்றோம். 

நடிக்கிறது அவங்க தொழில். ஆனா நாம ஏன் அதை ரொம்ப பெரிய விஷயமா கொண்டாடுறோம்னு தெரியல.  ஒரு விஷயம் என்ன ரொம்பவே யோசிக்க வச்சது என்னனா, ஒரு நடிகரை அல்லது நடிகையை பாக்குறோம் பொது இடத்துல,  அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்க ஆசைப்படுறோம்  எத்தனை நடிகர் அல்லது நடிகைகள் ஒரு நிமிஷம் நின்னு போட்டோ எடுக்குற உங்க பேரை கேக்குறாங்க? அல்லது எப்படி  இருக்கிறீங்கனு கேக்குறாங்க? அல்லது போட்டோ எடுத்ததுக்கு அப்பறம் ஒரு தேங்க்ஸ் சொல்றாங்க. (தேங்க்ஸ் அவங்க ஏன் சொல்லணும்னு நினைக்காதீங்க, ரசிகர்கள் இல்லைனா அவங்க படம்உம ஓடாது, காசும் கிடைக்காது.சோ தேங்க்ஸ் சொல்லணும்.மேடை மேடையா  ஏறினா மட்டும் தேங்க்ஸ் சொல்றாங்க இல்ல.ரசிகர்களுக்கு நன்றி அது அந்த போட்டோ எடுக்கும் போதும் இருக்கணும்.)சொல்லுங்க பாப்போம். மேடை ஏறினா மட்டும் உங்களால தான் நான் இங்க இருக்கேன். உங்களால தான் நான் வளந்துருக்கேன் ,நீங்க இல்லைனா நான் இல்ல , நீங்கதான் காரணம் அப்பப்பப்பா இன்னும் என்னனென்னவோ சொல்றாங்க. ஆனா நேர்ல ஒரு ரசிகனை அல்லது  ரசிகையை பார்க்கும்போது அந்த சந்தோசம் அவங்க முகத்துல இல்லையே.ஏதோ அவங்க நேரத்தை நாம வீணாக்குறமாதிரியும் , ஒரு தொந்தரவாக நாம இருக்குறமாதிரியும் behave பண்றாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சார்,இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரசிகனை பாத்தா  அவன் பக்கத்துல வந்து போட்டோ எடுத்தா சிரிச்சுக்கிட்டு ,எடுத்ததும் இப்பையும் தேங்க்ஸ் சொல்றாரு. ஹலோ சொல்றாரு. சியான்  விக்ரம்  சார், இப்பவரைக்கும் நின்னு சிரிச்சு பேசி போட்டோக்கு போஸ் கொடுத்து தேங்க்ஸ் சொல்லி நல்லா இருக்கீங்களானு கேக்குறார். விஜய்சேதுபதி சார்,பல  படி மேல போய் கூட்டத்தோட கூட்டமாய் நின்னு இன்னும் சொல்லப்போனா ரசிகனுக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு இருக்குறார். ஆனா இவங்கள தவிர எத்தனை பேரை நீங்க சொல்லுவீங்க ரசிகர்கள் கிட்ட அவங்களை  தொல்லையா நினைக்காம, அவங்க அன்பை  பாக்குறது? சொல்லுங்க.

ஆனா ரசிகர்கள்னு நாம பண்றதும் சில அட்டூழியத்தனம் தானே, என்னதான் நாம ஒரு நடிகையின் ரசிகரா இருந்தாலும் அவங்களை பாக்கும்போது எல்லை மீறி நடக்க முயற்சி பண்றது ஒரு பெண்ணை தொட்டுப் பாக்க முயற்சி பண்றது(இது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் தான். ஒருவரோடு சம்மதம் இல்லாம அவங்கள மேல விரல் கூட படக்கூடாது.அவங்க permission-னோட handshake பண்றது,hug பண்றது தப்பு இல்ல)இதுலாம் நாம பண்ற அசிங்கம் தானே. அவங்க எப்படி நடிச்சா என்ன ?அது தொழில் .அவங்களுடைய தொழில். வேலை. எல்லா வேலையும் மாதிரி நடிப்பும் ஒரு வேலைதான். அதைத்தான் அவங்க பண்றாங்க . அதுக்காக தொடணும் தொட்டுப்பாக்கணும்னு(அவங்க சம்மதம் இல்லாம) நினைக்கும்போது நம்முடைய சுய மரியாதையை நாம அங்க இழக்குறோம்னு கூட நாம உணர்வது  இல்ல.

நிஜமாவே அவங்களை நமக்கு பிடிச்சிருந்தா , அடடே என் ரசிகரா இவங்க, இந்த நல்லது பண்ணிருக்காங்களா? இந்த சாதனை பண்ணிருக்காங்களா அவங்க நா பாக்கணுமேனு அந்த நடிகர் நடிகை நினைக்குற அளவுக்கு நாம வரவேண்டாமா? (அப்படியெல்லாம் பண்ணிட்டா நா செலிபிரிட்டி ஆகிடுவேனேனு நினைக்காதீங்க) அல்லது அவங்களை மீட் பண்ணும்போது நீங்க என்ன பண்றீங்கன்னு ஒரு வேல அவங்க கேக்கும்போது நம்ம மேல மத்தவங்களுக்கு மரியாதை வரமாதிரியான  ஒரு இடத்துல நாம இருக்கவேண்டாமா? 

என்னைக்குதான் நாம மாறுவோம்? என்னைக்குதான் நாம திருந்துவோம். அவங்க நின்னா நியூஸ், நடந்தா நியூஸ், தும்மினா நியூஸ், இருமினா  நியூஸ்னு அவங்கள சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குற இந்த மீடியாவை சொல்றதா இல்ல முதல் வேலையா அந்த வீடியோவை பாத்து அவங்களுக்கு அதுலயும் காசு சம்பாதிச்சுக்குடுக்குற நம்மாலதானே இந்த மாதிரி நியூஸ் ரீச் ஆகுது , சோ நம்மள சொல்றதா?

இவங்களும் நார்மல் மனிதர்கள் தான்னு அவங்கள கொஞ்சம் கண்டுக்காம விட்டுட்டோம்னாலே எல்லாம் சரியாகிடும். அவங்களுக்கும் நம்ம மேல மதிப்பு வரும் நமக்கும் மாயை மோகம் தீரும் .ஆனா அது என்னைக்குதான்னு தெரியல .


உலகம் முழுக்க இப்படித்தான் இருக்கு.



திங்கள், 17 அக்டோபர், 2022

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

                 

                 நான் படித்து வளர்ந்தது அனைத்தும் நமது நாட்டில்.தமிழ் நாட்டில். எனது சொந்த ஊர் விருத்தாச்சலம் . நான் படித்தது தமிழ் நாட்டு மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் கல்லூரிகளில்.அரசு பள்ளியிலும் படித்தேன் தனியார் பள்ளியிலும் படித்தேன். நான் படித்த பொழுது நான் எதிர்கொண்ட  முதல் பிரச்னை கழிப்பறை வசதி. 

                அரசு பள்ளியில் படிக்கும் போது கழிப்பறைகள் சுத்தம் செய்யவே மாட்டார்கள்.அதனால் நாங்கள் எங்கள் பள்ளிக்கு பின்புறம்  சிறுது தூரம் நடந்துசென்று அங்கு  இருக்கும் மறைவான காட்டு செடிகளின் அருகில் பயன்படுத்திவிட்டு வருவோம். இதுதான் நான் படித்த  5 வருடங்களாக அங்கு நாங்கள் பின் பற்றியது. 

               அதன் பின் நான் இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் படிக்க தொடங்கினேன். அங்கும் கழிவறைகள் சுத்தமாக இருக்காது. அரசு பள்ளியிலாவது பின்புறம் காட்டுப்பகுதி இருந்தது ஆனால் தனியார் பள்ளியில் அதுவும் இல்லை. சுத்தமாக இல்லாத காரணத்தினால் கழிவறைகளை அநேகபேர் பயன்படுத்தவே மாட்டோம். நினைத்து பாருங்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை நாங்கள் கழிவறை  பக்கம் கூட செல்லமாட்டோம். இது எங்களுக்கு உடலளவில் எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்திருக்கும் என்று சற்று நினைத்துப்பாருங்கள். அதுவும் மாதவிடாய் காலங்களில் நாங்கள் படும் அவஸ்தைக்கு அளவே இருந்திருக்காது.அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

              நான் படித்து முடித்து பல வருடங்கள் ஆகின்றதுதான். ஆனால் இன்றும் பல தனியார் பள்ளிகளிலும் முக்கியமாக அரசு பள்ளிகளிலும் பிள்ளைகள் எதிர் கொள்ளும் முதல் பிரச்சனை கழிவறை வசதியாகத்தான் இருக்கின்றது. என் அண்ணன் மகள் தனியார் பள்ளியில் படித்தாள் . அவள் கழிவறை சுத்தமாக இல்லாத  காரணத்தினால் அந்த பக்கமே செல்ல மாட்டாள். விளைவு அவளுக்கு constipation தொல்லை வந்தது. அப்போது நான் யோசித்தேன் , நான் படிக்கும் போதும் பள்ளிகளில் இதே பிரச்சனை அடுத்த தலைமுறை படிக்கும் போதும் இதே பிரச்சனையா என்று. இது மிகவும் வேதனை அளிக்கின்றது.

               இதற்க்கு பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.ஏன் என்றால் , குழந்தையிலேயே அவர்களுக்கு தன்னுடைய சுய சுத்தத்தை சொல்லித்தரவில்லை என்றே நான் சொல்வேன். சுத்தம் செய்பவர்களும் மனிதர்கள் தானே.  பிள்ளைகளை வளர்க்கும் போதே வீட்டில் இருந்தே அந்த சுத்தம் வரவேண்டும் அல்லவா? பிள்ளைகளும் ஒரு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் வீடாக இருந்தாலும் வெளியிடமாக இருந்தாலும் தன் பிறகு மற்றவர் அதை பயன்படுத்த வேண்டுமே அதற்காக நாம் சுத்தமாக விட்டு செல்லவேண்டும் என்று ஒரு சிறிய basic knowledge என்று சொல்வார்களே அதை  கற்றுக்கொள்ள வேண்டும் .அதை கற்றுத்தர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. அதை அவர்களும் சரியாக பிள்ளைகளுக்கு சொல்லித்தரவேண்டும்.பிள்ளைகளும் பின்பற்றவேண்டும். அப்போது சுத்தம் செய்பவர்களும்அறுவருப்பு  படாமல் சுத்தம் செய்வார்கள். 

                 நான் அமெரிக்காவில் தற்போது வசிக்கிறேன். எனது குழந்தைகள் இங்கிருக்கும் பள்ளியில் படிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள கல்வி முறையும் இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் வேறு வேறு .அனால் நான் இங்கு பிள்ளைகளின் கல்வி பற்றி பேச வரவில்லை. அனால் இங்கு பிள்ளைகளுக்கு மூன்று  வருடங்களில் இருந்தே கழிவறைகளை சரியான முறையில் உபயோகப்படுத்த  கற்றுக்கொருக்கிறார்கள். அதை சுத்தமாக வைத்திருக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அதை உபயோகப்படுத்தியபின் கைகளை சுத்தமாக கழுவ கற்றுக்கொடுக்கிறார்கள். இங்கு என் பிள்ளைகள் நான் பட்ட அவஸ்தையை படவில்லை. நாங்களும் எங்களது கடமையை கற்றுக்கொடுத்துள்ளோம்.அவர்களும் பின்பற்றுகிறார்கள் . எந்த அருவருப்பும் இல்லாமல் இங்கு நிம்மதியாக உபயோகிக்கிறார்கள்.

                மாற்றம் ஒருவரிடம் இருந்து மட்டும் வராது . அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே ஆரோக்கியமான சுத்தமான தலைமுறையை உருவாக்க முடியும். இதற்கு கண்டிப்பான சட்டமும் தேவை படுகிறது. நமது நாட்டில் எத்தனை பள்ளிகளில் இன்றும் அசுத்தமான கழிவறைகள்  உள்ளது என்று தெரியுமா.எத்தனை பிள்ளைகள் இன்றும் காலை முதல் மாலை வரை அந்த பக்கமே செல்லாமல் தங்கள் உடலை வீணாக்கி கொள்கின்றனர் என்று தங்களுக்கு தெரியுமா.? இப்போது நாம்  பள்ளிகளை பற்றியும்  கல்வி முறையை பற்றியும் வாதிடுக்கின்றோம்  பேசுகின்றோம் விமர்சிக்கின்றோம் ஆனால் அடிப்படை வசதி இல்லை என்பதை மறந்துவிட்டோம்.  தயவு  கூர்ந்து ,   பள்ளி படிக்கும் பிள்ளைகளின் முதல் பிரச்சனையான இந்த கழிவறை பிரச்சனையை  தீர்த்து வைக்குமாறு தங்களை மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேலை தாங்கள் அதற்கான சட்டத்தை முன்னரே இயற்றியிருந்தால் அது சரியாக கவனிக்கப்படுகிறதா என்று உறுதி படுத்துங்கள்.கடுமையான சட்டம் தேவை. அது வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.



நன்றி

ஸ்ரீவித்யா கோவிந்தராஜ் 

        

வியாழன், 16 ஜூன், 2022

Know your body

 நம் மனித உடல் அற்புதமானது, விந்தையானது . பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. இந்த அற்புதமான மனித உடலை பத்தி தெரிஞ்ச சில விஷயங்கள் தெரியாத பலவிஷயங்கள் 'Know  your  body' -ங்குற இந்த செக்மெண்ட்ல பாக்க போறோம் . அதனுடைய முதல் வீடியோ இங்கே .கண்டிப்பா பாருங்க நாமம் உடலை பத்தி பல சுவாரஸ்யங்களை தெரிஞ்சுப்பீங்க.




படி படி படி

 ஸ்கூல் படிக்கும்போது இந்த 10th மட்டும் நல்லா படிச்சுட்டு அப்பறம் 11th பிரிய இருக்கலாம்னு சொன்னாங்க.ஆனா 11th -லேயே 12th portion சொல்லித்தர ஆரம்பிச்சு படி படி -னு டார்ச்சர் பண்ணினாங்க.12th வந்ததும் இந்த ஒரு வருஷம் மட்டும் கஷ்டப்பட்டு படி அப்பறம் வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னாங்க.

12th முடிச்சதும் MBBS ,BE ,BSC, BCOM ,BCA -னு எந்த டிகிரி எடுத்தாலும் படி படி படி பாஸ் ஆகணும் படி படி படி வேலை கிடைக்கணுமா வேணாமா படி படி படி -னு சொன்ன்னாங்க. ஒரு வழியா வேலைக்கு போனதும் அப்பாடா லைஃப்-ல செட்டில் ஆகியாச்சுன்னு நினச்சா , இதுமட்டும் போதாது field -ல நிலைக்கனும்னா புது புது டெக்னாலஜி  தெரிஞ்சு வச்சிருக்கணும். updated -ஆ இருக்கணும்னு சோ படி படி படி-னு சொல்றாங்க. அடப்பாவிகளா வாழ்க்கை முழுசும் படிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கே.

வியாழன், 12 மே, 2022

நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க?

 நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க  மாட்றாங்க? இது பொதுவா நாம எல்ல இடத்துலையுமே பாக்கலாம். ஒரு டிராபிக் -ல நின்னாக்கூட ஒரு மனுஷனை நகர சொல்லனும்னா அந்த மனுஷனுக்கு எவ்வளவு வயசா இருந்தாலும் யோவ் தள்ளி நில்லு அப்படீன்னு ஒருமைல தான் சொல்றாங்க. ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது? 

நம்ம அப்பா மேல நமக்கு மரியாதை இருக்கும். நம்ம அண்ணன் தம்பி எப்படி பட்டவங்க , எப்படி குடும்பத்துக்காக உழைக்குறவங்கனு நமக்கு தெரியும். ஒரு டிராபிக்-ல நிக்கும்போது இப்படி நமக்கு மறியாதைக்குறியவங்களை ஒருமையில ஒரு போலீஸ் அதிகாரி பேசினா நமக்கு இயல்பாவே  கோவம் வரும்தானே.அந்த அதிகாரி அப்படி பேசணும்னு பேசி இருக்கக்கூட மாட்டார் , ஆனா அது அவருக்கு பழக்கம் ஆகி இருக்கும்.

20 வயசு பையன 40 வயசு போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசினா ..அத கூட சரினு எப்படி சொல்லமுடியும்.அப்போ 60 வயசு பெரியவர் 40 வயசு போலீஸ் அதிகாரியை 'யோவ் நகரு' அப்படீன்னு சொல்லலாமா?!  ஒரு பப்ளிக் எப்படி ஒரு காவல் அதிகாரியை அவருடைய பதவிக்கும் உடைக்கும் அவருடைய வயதுக்கும் மரியாதை கொடுத்து சார் -னு கூப்பிடுறோம். ஆனா அவங்க எல்லாரையும் சார்-னு சொல்ல வேண்டாம்.சொல்லவே வேண்டாம் ஆனா , தம்பி நகருனு சொல்லலாம் ,வயசு அதிகமானவங்கள சார்-னு சொல்லலாம்.தப்பில்லை.

ஆனா எல்லாரையும் 'ஏய் இங்கவா', 'முன்னாடி நகரு' ,  'இங்க நீக்காத', 'போயிட்டே இரு' , இப்படி ஒருமையில் தான் சொல்றாங்க. எங்க இருந்து இவங்களுக்கு இந்த பழக்கம் வந்தது?யோசிச்சுப்பாத்தா இந்த அதிகாரிகளை அவங்களுடைய மேலதிகாரி எப்படி நடத்துறாங்களோ அப்படி தான் அவங்க தனக்கு கீழ  இருக்குறவங்களை நடத்துறாங்க. சரி, எங்க இருந்து ஆரம்பிக்குது இது? வேற எங்க ?! தலைவர்கள் கிட்ட இருந்துதான். பெரிய பதவியில் இருக்குற தலைவர்கள் தனக்கு கீழ பதவியில்  இருக்குறவங்களை ஒருமையில பேசுறாங்க, அத அவங்க தனக்கு கீழ இருக்குறவங்ககிட்ட பயன் படுத்துறாங்க. இப்படியே ஒரு ஒரு படியா கீழ இறங்கிவந்து கடைசில பொதுமக்கள் மேல காட்டுறாங்க. இது இங்க மட்டும் இல்ல எல்லா துறைகள்லையும் இருக்கு.ஆனா ,மற்ற துறைகளில் அந்த துறைகளுக்குளேயே இருக்கும் , போலீஸ்ங்குறதால  அவங்க பொது மக்களை அப்படி அழைக்குறாங்க. இது ஒரு இடத்துல மாத்தப்படவேண்டிய விஷயம் இல்ல . ஹயாராரிக்கி படி தலைவர்கள்கிட்ட இருந்து மாத்தவேண்டிய விஷயம். 

நடக்குமா? நடக்கணும் . நாம இதை மாத்தினாதான் அடுத்த தலைமுறை மாறும். இல்லைனா அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கம் மாறாது. மத்தவங்கள மரியாதையா கூப்பிடணும்னு தோணாது. நம்மகிட்ட இருந்து இப்பவே நாம இதை ஆரம்பிக்கணும்.

சனி, 23 ஏப்ரல், 2022

டைரக்டர்-களுக்கு ஒரு சேதி

 ஏன்பா டைரக்டர்களா , மாஸ் ஹீரோக்களை  வச்சு படம் எடுத்தா தான் நீங்க பெரிய டைரக்டர்-னு உங்களுக்கு நீங்களே ஏங்க ஒரு வட்டத்தை போட்டுக்கிறீங்க?

 டைரக்டர்-களுக்கும் கதைகளுக்கும்  தான் நடிகர்கள் நடிக்கனும். நடிகர்களுக்காக கதைகளை உருவாக்காதீங்க.கதைகளுக்காக நடிகர்களை நடிக்கவையுங்க.

எப்பவுமே கதைதான் ஹீரோ-வா இருக்கனும். சில டைரக்டர் -கள்  இருக்காங்க இன்னும் கதைக்காகத்தான் டைரக்டர் பண்ணுவேன் ஹீரோவுக்காக இல்லைனு.அது மாதிரி எல்லாருமே இருந்தா  நல்லா  இருக்கும்.

future -ல உங்க ஜெனெரேஷன்  உங்க படங்களை பாத்து பாராட்டணும் வியக்கனும் , உங்க பிள்ளைங்களே வளந்ததுக்கு  அப்பறம் படத்தை பாத்து கிண்டலோ நக்கலோ பண்றமாதிரி இருக்க கூடாது.

நல்ல கதை இருந்தா போதும்னு மக்கள் நாங்க எவ்ளவோ மாறுறோம் ஆனா நீங்க மாறமாட்ரீங்களே .



புதன், 30 மார்ச், 2022

தப்புதான்!! ஆனா தப்பில்ல!!! ஆனா தப்பு !!!!

 ரஷ்யா உக்ரைன் பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டுட்டு, டாப் 1-ல சமீபத்தில கேள்விப்படுற,படிக்குற,பாக்குற ,விவாதிக்குற விஷயம் Will Smith , Chirs  Rock -ஐ ஆஸ்கர் மேடையில் அறைஞ்சதுதான் .

வில் ஸ்மித் -ன் மனைவி ஜடா ஸ்மித் , அலோபீசியா அப்படினுங்குற ஒரு விஷயத்துனால பாதிக்கப்பட்டு முடிகளை இழந்துருக்காங்க. அதாவது இந்த அலோபீசியா எதனால ஏற்படுத்து அப்படீனா , உடல்ல நோய் எதிர்ப்பு சத்தி குறைஞ்சு அது முடிகள் வளரத்துக்கான ஃபாலிக்குளை பாதிச்சு முடிகளை உதிரவச்சுடும்.அதனால தலையில அங்க அங்க சொட்டை ஏற்படும். இந்த பாதிப்பாலதான் ஜடா ஸ்மித் தலையை மொட்டை அடிச்சுக்கிட்டாங்க.

இந்த உடல் நல குறைவை வச்சு ஆஸ்கர் மேடையில தொகுப்பாளர் Chirs  Rock ,ஜடா ஸ்மித்ஐ கிண்டல் பண்ணினதும் அதை பொறுத்துக்க முடியாத வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் Chirs  Rock-ஐ அறைஞ்சிட்டாரு ,அதுமட்டும் இல்லாம ரொம்ப கோவத்தோடு Chirs  Rock -ஐ பார்த்து இன்னோர் தரம் என் மனைவியின் பேர் உன்வாயில இருந்து வரக்கூடாதுன்னு திட்டிருக்காரு.

மனைவி அப்படீனால ஒரு கேலிப்பொருளா மத்தவங்களுக்கு முன்னாடி, அதுவும் குடும்பம் சொந்தம் முக்கியமா friends -முன்னாடி மனைவியை, மனைவியின் செயலை , மனைவியின் பேச்சை கேலி கிண்டல்  செஞ்சு,  அதன் மூலமா மத்தவங்களை சிரிக்க வச்சு தானும் சிரிச்சு  (சில நேரம் கொட்ட முடியாததை  எல்லாம் மத்தவங்க முன்னாடி இப்படி கிண்டலா கொட்டி திருப்தி அடஞ்சுக்குற) தெரிஞ்சோ தெரியாமலோ மனைவி அப்படிங்குற தன்னுடைய சரி பாதியை கஷ்டப்படுத்துற எத்தனையோ கணவன்களை பாக்கும் போது  நினைக்கும் போது  வில் ஸ்மித் -ன் செயல் , இப்படியும் இருக்காங்க அப்படினு நினைக்க, பெருமை பட, சந்தோஷ பட  தோணுதுதான் . அது முழுக்க முழுக்க அளவுகடந்த காதலின் வெளிப்பாடு அன்பின் வெளிப்பாடு . ஒத்துக்கலாம் . புரிஞ்சுக்கலாம்.


ஆனா நாகரீகம் அதுவும் முக்கியமா மேடை நாகரீகம் அப்படீன்னு ஒன்னு இருக்கே.நாம எப்படி இருந்தாலும் என்ன செஞ்சாலும் என்ன உடை அணிந்தாலும் நம்ம கிண்டல் கேலி செய்யுறதுக்கு ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யுது.சிலநேரம் அது அவங்களின் அறியாமைனு சொல்லிக்கலாம் ,சிலநேரம் பொறாமைனு சொல்லிக்கலாம், தன்னால முடியல இவங்க செய்யுறாங்கலேன்னு ஒரு இயலாமை அப்படீன்னு கூட சொல்லிக்கலாம். இந்த மாதிரி சமயத்துல உலகமே பாத்துகிட்டு இருக்குற ஒரு மேடையில வில் கொஞ்சம் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிருக்கலாம். மேடைக்கு பின்னாடி கண்டிச்சுருக்கலாம். இல்ல அவரை அறையுறதைவிட்டுட்டு தன்னுடைய கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவிச்சு இருக்கலாம். 

ஒரு சாதாரண மனிதன் இப்படி நடந்துகிட்டு இருந்தாலே அது தவறு .பலகோடி பேர் இவரை  ஒரு ரோல் மாடலா நினைச்சுகிட்டு இருக்குற இடத்துல வில் இருக்காரு.அப்படி பட்ட ஒரு மனிதன் தன்னைப்போல வாழ்க்கைல முன்னேற நினைக்கிற மத்தவங்களுக்கு ஒரு  தவறான உதாரணமா ஆகிடக்கூடாது தன்னுடைய நடவடிக்கைகளால. ஒரு மனுஷன்  தன்  வாழ்க்கைல ஒரு நல்ல position -க்கு  வரதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்படணும் ஆனா அந்த உச்சியில இருந்து கீழிறங்க ஒரு கஷ்டமும் படவேணாம் , ஒருநிமிஷம் போதும் அப்படினு சொல்லுறதுக்கு சமீபத்திய உதாரணம் தான் WILL SMITH . 


[என்ன வில் -இப்ப்படி பண்ணிட்டீங்களே வில் . இப்பதான் உங்க புத்தகத்தை ரசிச்சு அனுபவிச்சு படிச்சுக்கிட்டு இருந்தா இப்படி.....ஹ்ம்ம் அப்போ உங்க புக்கோட அடுத்த பார்ட்ல இதப்பத்தி எழுதுவீங்கன்னு எதிர்பாக்கலாம்.] 


Red pumbkin : Tamil vlog - Human Body Part 1

என்னுடைய youtube சேனல்-ல human  body பற்றிய ஒரு புது செக்மென்ட் ஆரம்பிச்சுருக்கேன்.  

மனித உடல் எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா? நம்ம உடம்புல இருக்குற ஒரு ஒரு பகுதியும் ஒரு ஒரு உறுப்பும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுகிட்டு தான் இருக்கு. இது இருக்குறது வேஸ்ட் இது இருக்குறதனால எந்த பயனும் இல்ல இப்படி நாம எதையுமே சொல்ல முடியாது .நம்ம உடம்பின் ஒரு ஒரு பகுதிகளோடு வேலையையும் பயன்களையும் தெரிஞ்சுக்கிட்டோம்னா நாம அப்படியே பிரமிச்சுடுவோம். 

நா படிச்சு ஆச்சரியப்பட்ட வாயடுச்சுப்போனா விஷங்களை இந்த செக்மென்ட் மூலமா உங்க கூட ஷேர் பண்ணிக்குறதுல என்னக்கு ரொம்பவே சந்தோசம். அந்த வகையில இந்த வீடியோ முடிகளை பற்றிய விஷயங்கள் -பாகம் 1




சனி, 12 பிப்ரவரி, 2022

Home maker-job easy இல்லைங்க

 நமக்கு ஒரு dream job -னு இருக்கும் அப்படி ஒரு job -க்கு போகணும்னு நினச்சா அதுலாம் நம்ம குடும்பத்துக்கு  சரிப்பட்டு  வராதுனு சொல்லி அவங்க இஷ்டப்படி வேலைக்கு போக வைக்குறாங்க.

சரி செய்ற வேலைய  interest-ஆ வேலை செஞ்சா , சீக்கிரம் கல்யாணம் பண்ணு வயசாகுதுனு சொல்றாங்க. கல்யாணம் பண்ணினா சீக்கிரம் கொழந்தைய பெத்துக்கோங்க வயசாகுதுனு சொல்றாங்க கொழந்தைய பெத்ததுக்கு அப்பறம் வேலைக்கு போகலாம்னா சின்ன கொழந்த ஏங்கிடும் கொஞ்சநாள் ஆகட்டுமேனு சொல்றாங்க சரிதானு கொஞ்சநாள் போனா அடுத்த கொழந்த பொறந்துடுது.அப்பறம் அந்த கொழந்தைக்காக 3 ,4 வருஷம் போக்கிடுறோம்.

கடைசியா ஒரு வழியா வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணினா நம்ம dream  job -க்கு வயசு limit ஆகிடுது ,சரி செஞ்ச வேலையாவது  மறுபடியும் start பண்ணுவோம்னு தேடினா long  gap  இருக்கே அந்த experience  இருக்கா இந்த experience இருக்கானு கேக்குறாங்க. 

8 வருஷம் break  விட்டு வேலைய தேடிப் பாக்குறவங்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம். House wife/Home maker  -னா ஒன்னும் அவ்வளவு easy  வேலை இல்லைங்க. ஒரு ஒரு பொண்ணும்  தன்னோட கனவு  ஆசை எல்லாம்  ஓரமா ஒதுக்கி வச்சுட்டு , குடும்பத்துக்காக தன்னோட வாழ்க்கைல பல வருஷங்களை கழிக்குறா .

குடும்பத்துல இருக்குறவங்க நல்லா சாப்பிட, அந்த வீடு அழகா இருக்க, சுத்தமா இருக்க, organized -ஆ இருக்க,Neat -ஆ இருக்க , குடும்பத்தோட பொருளாதாரத்துல ஓரளவுக்காவது உயர்ந்த  நிலையில இருக்க ஒரு ஒரு குடும்ப தலைவியும்தான் கரணம். எத்தனையோ குடும்ப தலைவிகள் சிறுக சிறுக சேத்து வச்சு பிள்ளைங்க படிப்புக்கோ, கடனை அடைக்கவோ, இல்ல பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா நகை சேர்த்து வைக்கவோ இல்ல வீடு வாங்கவோ இல்ல வாடகை குடுக்கவோன்னு சம்பாதிக்கிற பெண்களும் சரி இல்ல House wife/Home  maker  -சரி உழைச்சுக்கிட்டே தான் இருக்காங்க.

ஒரு ஆணோ பெண்ணோ வேலைக்குனு  போய் உழைக்குறதுக்கு எந்த வகையிலும் குறைவில்லாம House wife/Home maker-ம் உழைக்குறாங்க. அத முதல்ல எல்லோரும் புரிஞ்சுக்கணும்.

கல்யாணம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறமும் உன்னோட கனவை துரத்தி போ -னு பொண்ணு பின்னாடி நின்னு தட்டி குடுத்து ஊக்கப்படுத்த ,எனக்கு கிடைச்ச கணவன் மாதிரி ஒரு சில பேர் மட்டும் தான் இருக்காங்க. யாருமே இல்லனு சொல்லமுடியாது , பொருளாதார தேவைக்காக குடும்பம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறம் வேலைக்கு பொண்ணுங்க போறாங்கதான் /வேலைக்கு போக வற்புறுத்தப்படுறாங்க (/அவங்க நிலைமை அப்படி இருக்கு )இல்லைனு சொல்லல. ஆனா அவங்களுடைய dream job  என்ன? என்ன செய்யணும்னு ஆசைப்பட்டாங்க அதைதான் செய்யுறாங்களானு பாத்தா அதை  செய்யுறவங்க ரொம்பவே குறைவானவங்கதான். 


என்ன கேட்டா காலைல 6 மணிக்கு எந்திரிச்சு குளிச்சுட்டு அவசரமா சாமிய கும்பிட்டு கிச்சன் பக்கம் வந்து இட்லி ஊத்தி  சட்னி அரைச்சு முடிச்ச கையோட  lunch  செய்ய ஆரம்பிச்சு   7 மணி போல வேகமா பிள்ளைங்களை எழுப்பி அரைதூக்கத்துல  இருக்குற பிள்ளைங்களை பல்லு தேய்க்கவச்சு அவங்களுக்கு குளிப்பாட்டி 7.30 மணிக்கு புருஷனை எழுப்பி விட்டு office -க்கு கிளம்ப சொல்லி ,பிள்ளைங்களுக்கு uniform  போட்டுவிட்டு தலையை சீவி 8 மணிக்கு  breakfast கொடுத்து tiffin  box -ல லஞ்ச் வச்சு பிள்ளைங்கள ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டுட்டு வீட்டுக்கு வந்தா 8.30 வேலைக்கு ரெடியாகி வந்து நிக்குற புருஷனுக்கு breakfast  வச்சு , அன்னைக்கு செஞ்ச சட்டினிமாதிரி டேஸ்ட் இன்னைக்கு இல்லனு கொடுக்குற கமெண்டை கடுப்பு ஆனாலும் அடுத்ததரம் செஞ்சுடலாம்ங்கனு புன்னகையோடு  சொல்லிட்டு புருஷனுக்கு லஞ்ச் box -ல லஞ்ச் கட்டி கொடுத்துட்டு அவரையும் ஆபீஸ்க்கு வழியனுப்பி வச்சுட்டு அப்பாடானானு 9.30க்கு உக்காந்து நியூஸ் பாத்துகிட்டே 4 இட்லியை வாயில போட்டுக்கிட்டு 10 மணி போல room க்கு போய் போர்வை எல்லாம் மடிச்சு வச்சுட்டு பிள்ளைங்க ரூம்-ஐ சுத்தப்படுத்திட்டு 10.30 மணிக்கு மறுபடியும் கிச்சன் -க்கு வந்து பாத்திரத்தை எல்லாம் தேச்சு வச்சுட்டு 11.30 போல வீட்டை பெருக்கி வீட்டை துடைச்சு ,துடைச்சதை அலசி காயவச்சுட்டு 12.15 போல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் phone  பண்ணி பேசிட்டு 1 மணி போல சாப்பிட்டு ஒரு ,ஒரு   மணி நேரம் தனக்காகன நேரமாக்கிக்கிட்டு 2 மணி  போல காஞ்ச துணி எல்லாம் எடுத்து மடிச்சு iron பண்ணி வச்சுட்டு 3 மணிக்கு பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க அவங்கள பிக்கப் பண்ணிட்டு , பிள்ளைங்க வந்ததும் அவங்கள டிரஸ் மாத்த வச்சு சாப்பிட ஏதாவது நொறுக்குத்தீனி  குடுத்துட்டு அவங்கள tuition பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் keyboard கிளாஸ்-னு ஏதவது கிளாஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு(online  கிளாஸ் அதைவிட மோசம் , பக்கத்துலயே உக்காந்து சரியா கவனிக்குறாங்களானு பாத்துகிட்டே இருக்கணும் வேற)   வீட்டுக்கு வந்து evening snacks  எதாச்சம் செஞ்சு வச்சுட்டு  மறுபடியும் பிள்ளைங்களை போய்  கிளாஸ்-ல இருந்து கூப்டுகிட்டு வந்து பிள்ளைங்களுக்கு ஸ்னாக்ஸ்  கொடுத்துட்டு , coffee  இல்ல டீ  போட்டு குடுச்சுட்டு பிள்ளைங்களுக்கு பூஸ்ட் போட்டு குடுத்துட்டு பிள்ளைங்களை ஹோம்  ஒர்க் பண்ண வச்சு அடுத்தநாளுக்கு தேவயானதையெல்லாம் எடுத்து வச்சுட்டு ஆபீஸ்ல இருந்து வர புருஷனுக்கு காபி போட்டு கொடுத்துட்டு நைட் dinner  ரெடி பண்ணிகிட்டே அடுத்த நாள் காலைல சமைக்க தேவையான காய் எல்லாம் வெட்டி  boxல போட்டு பிரிட்ஜ்ல வச்சுட்டு , நைட் dinner -ஐ  எல்லாருக்கும் குடுத்துட்டு எல்லாம் சாப்பிட்டதும் பாத்திரத்தை கழுவி வச்சுட்டு அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு போய்  படுக்க நைட் 10 மணி ஆகும். மறுபடியும் அடுத்த நாள் அதே routine ...என்ன கேட்டா,Home  maker-job விட கடினமான job இல்லைன்னுதான் சொல்லுவேன் .









வெள்ளி, 7 ஜனவரி, 2022

விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அன்பான அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,


         நம்ம ஊர் விருதாச்சலத்துல இருக்குற பெரிய கோவில் என்று அழைக்கப்படுற 'விருத்தகிரீஸ்வரர்' ஆலயத்துடைய  கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாசம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கு. இதுக்காக கோவிலை சுத்தப்படுத்திகிட்டு இருக்காங்க.கோவிலை பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு. 

        எல்லா கோபுரங்களுக்கும் புதுசா பெயிண்ட் நடிச்சிருக்காங்க. கோபுரத்துல ரொம்பவே அழகா எல்லா  லைட்டும்  எரியுது. [கோபுரம் என்பதை"கோ+புரம்' -னு பிரிக்கணும் . "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியுற  அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுறாங்க . இதனால தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'னு  சொல்லுற  வழக்கம் வந்தது]

சிவன் சன்னதி,விருத்தாம்பிகை சன்னதியை சுத்தி அவ்வளவு அழகா சுத்தப்படுத்தி இருக்காங்க.என்னை பசை, விளக்கு தீபங்களுடைய கரி துகள்கள் எல்லாம் இல்லமா அவ்வளவு அழகா இருக்கு கோவிலை பாக்கவே. இப்படி தான் நம்ம ஊரு கோவில் எப்பவுமே  இருக்கணும்னு நினச்சேன். 

இப்படி நம்ம கோவிலை  சுத்தமாவும், அழகாவும் வச்சுக்குறது நம்முடைய கடமை. ஊரு உலகமே பாத்து ஆச்சர்யப்படுற நம்ம கோவிலை தூய்மையா வச்சுக்குறது நம்முடைய கடமை. எல்லா இடங்களையும் தீபத்தையும் கற்பூரத்தையும் ஏற்றாம அதற்கான ஒரு இடத்துல மட்டும் எல்லா விளக்குகளையும் ஏத்துறமாதிரி அமைக்கணும், ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடணும். அதை மக்களும் கேட்டு,ஏத்துக்கிட்டு  நடந்துக்கணும். ஒரு பெரிய கோவிலை சுத்தப்படுத்துறதுங்குறது ரொம்ப பெரிய விஷயம். நம்மால செய்ய முடியல அட்லீஸ்ட் செஞ்சதையாவது பத்திரமா பாத்துப்போமே . 


அனைவரும் கும்பாபிஷேகத்துக்கு வாங்க. இறைவனின் அருள் பெறுக