பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 18 நவம்பர், 2013

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை, நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர்.
அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்', விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.

'காலமும்', 'வெளியும்' அந்த மாவெடிப்பிலிருந்துதான் உருவாகின என்று நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத உண்மையினை அந்த கோட்பாடு கூறியது.

galaxy_380உலகத்தை உலுக்கிய அந்த கோட்பாடு கூறியது என்னவென்று சுருங்கச் சொல்வதென்றால் 'from nothing the universe appeared' அதாவது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாகியது என்பதுதான். மேலும் குறிபிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஓர் அசுர வேகத்தில் நடந்த அந்த வெடிப்பிலிருந்து ஒரு சீரான, பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்ட பிரபஞ்சம் தோன்றியதாகவும் அக்கோட்பாடு கூறியது. ஒரு பெரும் வெடிப்பு எப்போதும் ஒரு சீரான விஞ்ஞானத்திற்கு கட்டப்பட்ட ஓர் அமைப்பை உண்டாக்குவது என்பது இயல்பன்று.மா வெடிப்புக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினர். ஆரம்ப கட்ட சில எதிர்ப்புக்களுக்குப் பிறகு விஞ்ஞான உலகம் அதை ஏற்றுக்கொண்டது. அந்தக் கோட்பாடு கூறிய மா வெடிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் பிறகு பெரும் முயற்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன.

காரணம் இல்லாமல் ஒரு காரியமா?

ஆனால் ஒன்றுமில்லா (from nothing) நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு பிரபஞ்சம் உருவாகியதென்பதும், காலம் அப்போதுதான் தோன்றியதென்பதும் அந்த கோட்பாடு கூறியது விஞ்ஞானிகளுக்கு ஒரு நெருடலாகவே இருந்து வந்தது. காரணம் இல்லாமல் ஒரு காரியம் நடக்காது. அதாவது மாவெடிப்பு ஒரு காரணம் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

'பெண்களின் கூந்தலுக்கு ஒருக்காலும் இயற்கையில் மண‌ம் இருக்க முடியாது' என்று நக்கீரர் ஆணித்தரமாக கூறியது போல 'ஒன்றுமில்லா (from nothing) நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப்பட்ட' ஒரு பிரம்மாண்டமான பிரபஞ்சம் ஒருக்காலும் உருவாகி இருக்கவே முடியாது என்றும் நம்பினர்.

பலர் இந்தக் கேள்விக்கு விடை தேடி அலைந்தனர் -விளைவு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில விஞ்ஞானிகள் இந்த மா வெடிப்பு ஒரு தொடக்கமல்ல, ஒரு தொடர் கதைதான் என்கிறார்கள்.. அப்படியென்றால்?

நாம் கூறும் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த 'மா வெடிப்பு' முதல் முறையாக நடந்தது அல்ல, அது தொடர்ந்து பல முறை நடந்து இருக்கின்றது -அதாவது ஒரு மா வெடிப்பிலிருந்து ஒரு பிரபஞ்சம் உருவாகி அது போதிய அளவு விரிந்த பின், ஈர்ப்பு விசையினால் பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி ஒரு புள்ளியாகி பிறகு மீண்டும் மாவெடிப்பு ஏற்பட்டு விரிவடைகின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வேறு சில விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன என்றும் கூறுகின்றனர். குழந்தைகள் சோப்பு நீரை உபயோகித்து சோப்பு முட்டைகளை ஊதிவிடுவார்களே அதுபோல புதிய பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நமது பிரபஞ்சம் வேறு ஒரு பிரபஞ்சத்தின் கருந்துளையிலிருந்து 'மா வெடிப்பு' அடைந்து வந்திருக்கும் என்றும் நாம் வாழூம் இந்த பிரபஞ்சத்திலிருந்து கருந்துளைகள் மூலமாக வேறு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன என்று மெய்சிலிர்க்கவைக்கும் கோட்பாட்டினை கூறுகின்றனர். இக்கருத்துக்களை பல விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர்.

புதிய பல பிரபஞ்சங்களா? கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றது. நாம் வாழும் பிரபஞ்சம்தான், வேறு ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இது நம்பமுடியாமல் இருக்கின்றது.

விஞ்ஞானிகள் கூறும் இந்த வகையான புதிய கோட்பாடுகளைப் பற்றி புரிய வேண்டுமென்றால் நாம் முதலில் மா வெடிப்பு மற்றும் பிரபஞ்சத் தோற்றம் என்பதைப் பற்றி நன்கு அறிய வேண்டும். அது தெளிவாகப் புரிந்தால் விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடாகிய 'பல பிரபஞ்சங்கள்' எப்படி சாதியமாகும் என்று விளங்க முடியும்.
பிரபஞ்சத்தின் தோற்றம்

பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்றால், சந்தேகமேயில்லை, காலகாலமாக அப்படியே இருந்திருக்கின்றது; வரும்காலத்திலும் அதன் கோலம் மாறாது என்று தான் பலரும் உறுதியாக நினைத்துக் கொண்டிந்தனர்.

'இதற்கு ஒரு துவக்க்கமா? ஆச்சரியமாக இருக்கின்றதே' என்று விஞ்ஞானிகள் கூறியதைக் கேட்டு வியந்தவர்களுக்கு அது துவங்கிய விதத்தைக் கேட்டவுடன், அதை நம்பவே முடியவில்லை. அப்படி என்ன கூறினார்கள்?

பிரபஞ்சம் ஆரம்பத்தில் ஓர் அணு அளவிலிருந்து இப்போது நாம் காணும் அளவு பெரியதாய் ஆகி இருக்கின்றது என்று கூறினர். ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சமா? நம்புவது மிக மிகக் கடினம்தான். இப்படித்தான் பூமி தட்டையில்லை உருண்டைதான் அல்லது பூமிதான் சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றது என்று அறிஞர்கள் கண்டறிந்து கூறியபோது முதலில் நம்ப முடியவில்லைதான்.

பிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்ளல் அவசியம். பர‌ந்து விரிந்த கடல்களையும், காடுகளையும், மலைகளையும் கொண்ட நாம் வாழும் இந்த பூமியின் தோற்றமே நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்த பூமி போல பத்து லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவு பெரியது நமது சூரியன். இந்த சூரியனைச் சுற்றி எட்டு கிரகங்கள், அதற்கு நிலவுகள். கடைசி கிரகம் நெப்டியூன் சூரியனிலிருந்து 450௦ கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதற்குப் பிறகு ப்ளுட்டோ என்ற சிறிய கிரகமும் மற்றும் எண்ணிலடங்கா விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் கொண்ட இந்த சூரிய குடும்பமே மிகப் பெரியது. நம் சூரியனைப்போல சுமார் நானூறு கோடி நட்சத்திரங்களைக் கொண்டது நம் சூரியன் இருக்கும் பால்வெளி மண்டலம். நமது சூரியனைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. நமது பால்வெளி மண்டலத்தின் குறுக்களவு எவ்வளவு தெரியுமா? மணிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய ராக்கெட் கிடைத்தால், அதில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால்தான், ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல முடியும்.

நம் பால்வெளி மண்டலத்தைக் காட்டிலும் பல நட்சத்திர மண்டலங்கள் (கூட்டங்கள்) அளவில் பெரியவை.

பிரபஞ்சத்தை பிரமிக்க வைக்கும் பிரமாண்டம் என்று கூறுவது ஏன் என்றால், இந்த பால்வெளி மண்டலம் போல் சுமார் நானூறு- ஐநூறு கோடி மண்டலங்கள் கொண்டதுதான் 'நாம் அறிந்த' பிரபஞ்சமாகும். மனிதனுடைய கற்பனை வளம் மிகப்பெரியது. ஆனால் எந்த கற்பனைக்கும் எட்டாததுதான் நமது பிரபஞ்சத்தின் பிரமாண்டம். நம் பால்வெளி மண்டலத்திலிருந்து அடுத்துள்ள மண்டலத்திற்கு தூரம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு மூன்று லட்சம் வேகம் செல்லும் வாகனத்தில் புறப்பட்டால், அடுத்த மண்டலத்தை அடைய ஒரு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆகும்.

அவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு சிறிய அணு அளவிலிருந்து வந்தது என்பது ஜீரணிக்கவே முடியாததுதான். அணு அளவிலிருந்து அதி வேகமாக விரிவடைந்து வந்ததால் தான் அதை மாவெடிப்பு என்றார்கள். உண்மையில் இந்தக் கோட்பாட்டை சொன்ன விஞ்ஞானி மாவெடிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. இந்த கோட்பாட்டினை எதிர்த்த விஞ்ஞானி தான் இந்த கோட்பாட்டை 'நையாண்டி' செய்யவே இப்படி பெயர் வைத்தார்.

இந்த கோட்பாட்டை பலர் எதிர்த்தனர். ஏன் அழியாப் புகழ் கொண்ட மாபெரும் விஞ்ஞானி 'ஐன்ஸ்டீன்' முதலில் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு என்று பெருந்தன்மையோடு ஒத்துக் கொண்டார் பிறகு.

மாவெடிப்புக்கு முன் 'வெளி' இல்லை

வெடிப்பு என்பது சத்தத்துடன் இணைந்தது தான். ஆனால் அங்கே சத்தம் இல்லை. ஏன் என்றால் அங்கு வெளி இல்லை. வெளி இல்லாததால் காற்றும் இல்லை. அதனால் சப்தம் இல்லை. sound வெளியிலுள்ள காற்றினூடே சென்றால்தான் அந்த sound யை கேட்கமுடியும் .

என்ன 'வெளி' இல்லையா? காற்று இல்லையா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். என்னவென்றால், பிரபஞ்சம் ஆரம்பிக்கும்போது உலகில் நாம் இப்போது காணும் ஒரு பொருளுமே இல்லை. ஏன் தூசியும் கூட இல்லை. ஆரம்பத்தில் பிரபஞ்சத்தில் சக்தி மட்டுமே இருந்தது. சக்தி அணுதுகள்களாக மாறி அந்த அணுத்துகள்கள் அணுக்களாக மாறி நாம் காணும் எல்லாப் பொருட்களுமாகி, மிருகங்களும் மனிதனும் ஆனது.

காலத்தின் துவக்கம்

காலங்காலமாக நாம் நினைத்துக்கொண்டிருந்தது 'காலத்திற்கு துவக்கமோ அல்லது முடிவோ இல்லை, அது எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கின்றது' என்றுதான். ஆனால் மாவெடிப்பிலிருந்துதான் 'காலம்' துவங்கியது என்பதை ஜீரணிப்பது கடினம். காலம் வேறு வேறு இடங்களில் வேறு வேறு விதமாக நகருகின்றது என்றும் விஞ்ஞானிகள் கூறியதை தற்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள்.

எப்படி இந்த வகையான முடிவுக்கு வந்தார்கள்?

தொலைநோக்கி கண்டுபிடிக்கும்வரை 'தொல்லை' இல்லாமல் இருந்தது. தொலைநோக்கியை கண்டுபிடித்த குற்றவாளி கலிலியோ தான். அவரது தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்தின் உண்மையான நிலையை எடுத்துக் காட்டியது. பின்னர், பல சக்தி வாய்ந்த, அதி நவீன தொலைநோக்கிகளை கண்டுபிடித்தனர். 'மடை திறந்த வெள்ளம் போல' பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் பற்றி அறிய முடிந்தது.

அதில் மிக முக்கிய ஒரு கண்டுபிடிப்பு என்னவென்றால் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்பதாகும். சூரியனைச் சுற்றும் கிரகங்களையும், கிரகங்களைச் சுற்றும் நிலவுகள் தவிர, பிரபஞ்சம் அசைவின்றி, என்றென்றம் நிலையாக இருக்கின்றது என்ற பிரபஞ்சத்தைப் பற்றிய நமது தவறான கருத்து உடைத்தெறியப்பட்டது.

பிரபஞ்சம் எல்லா திசைகளிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. நம் பால்வெளி மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள மண்டலங்கள் (galaxy) நம்மை விட்டு வெகு வேகமாக விரிவடைந்து நகர்கின்றன என்ற செய்தி சில விஞ்ஞானிகளுக்கு, ஒரு உண்மையைப் புலப்படுத்தின. வேகமாக விரிவடையும் இந்த பிரபஞ்சம் ஒரு காலகட்டத்தில் சிறியதாய் இருந்திருக்க வேண்டும். ஒரு வெடிப்பிலிருந்து கிளம்பிப் பரவும் துகள்கள் போல 'மண்டலங்கள்' சிதறிப் பரவுவதால், பிரபஞ்சம் ஒரு வெடிப்பிலிருந்து தோன்றியது என்று கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்தக் கோட்பாட்டினை உறுதிசெய்ய விஞ்ஞான உலகம் பெரும் முயற்சியில் இறங்கியது. அப்படி ஒரு மாவெடிப்பு நிகழ்ந்திருந்தால் அதன் கதிர்வீச்சு இன்றும் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்று கூறினர். பலர் அதனைத் தேடி அலைந்தபோதும் , தற்செயலாக பென்சியாஸ், வில்சன் என்ற இருவர் அதைக் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதியிலிருந்தும் மா வெடிப்பின் பின்விளைவான தேடப்பட்ட அந்த 'அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சு' (cosmic microwave radiation) நம் பால்வெளி மண்டலத்தையும் தாண்டி பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதை அவர்கள் கண்டறிந்ததால் அந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு 1978ல் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பூமியின் நிலப்பரப்பிலிருந்து கிடைத்த ஆராய்ச்சியின் முடிவு போதாதென, இந்த கோட்பாட்டை நூறு சதம் உறுதி செய்ய மேலும் பிரபஞ்சத்தின் எல்லா குணாதிசயங்களையும் கண்டறிய அண்ட வெளிக்கு மிகுந்த பொருட்செலவில் 'வில்கின்சன் மைக்ரோவேவ் அணிசோ ற்றோபீ பரோப் ' (wilkinson microwave anisotropy probe) என்ற அதிநவீன செயற்கைக்கோள் 2001இல் அனுப்பப்பட்டது

இந்த ஆராய்ச்சி பிரமிக்கத்தக்க வெற்றி அளித்தது. பிரபஞ்சம் எப்போது ஆரம்பித்தது, டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி போன்ற பல புதிய விவரங்களையும் மிகத் தெளிவாக கொடுத்து, 'மா வெடிப்பு கோட்பாட்டை' சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிசெய்தது

கருந்துளைக் கோட்பாடு

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பார்த்தோம். சுமார் 1370 கோடி ஆண்டுகளாக அது நிற்காமல் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. ஒரு சில வினாடிகளில் அது சூரிய குடும்பத்தின் அளவு விரிவடைந்தது என்றால் அந்த வேகம் என்னவென்று பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு ஆண்டுகளாக விரிவடைந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைக் கற்பனை செய்து பாருங்களேன்.

black_hole_380சரி 'மா வெடிப்பு' தொடக்கமா அல்லது தொடர்கதையா என்ற விவாதத்துக்கு வருவோம். நம் பிரபஞ்சத்தின் கருந்துளைகள் மூலமாக வேறு பிரபஞ்சங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்றும் நமது விரிவடையும் பிரபஞ்சம் அதன் விரிவாக்கம் நின்று, சுருங்கி அணுவளவு அடைந்து மீண்டும் மா வெடிப்பு அடைகிறது என்று விஞ்ஞானிகளின் புதிய கோட்பாட்டினைக் கண்டோம்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டுமேன்றால், நட்சத்திரங்கள் எப்படி உருவாகின, கருந்துளைகள் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். இதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.. சிறிது கவனம் செலுத்தினால் போதும், நீங்கள் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டவர் ஆவீர்கள்.

பிரபஞ்சம் தோன்றும் போது உருவாகிய சில சக்திகளில் ஈர்ப்பு விசை (force of gravity) என்ற சக்தியும் ஒன்று. இந்த சக்தி என்னவென்று யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. வழுக்கி விழுந்தவர்கள் நம்மில் பலபேர் இருக்கின்றார்கள். நம்மை பூமியை நோக்கி விழ வைப்பது பூமியின் ஈர்ப்புவிசை. இந்த சக்தி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதைக் காண்பது மிக அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதாவது நீங்கள் மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைச் சுற்றிய எல்லாப் பொருட்களுமே மிதக்க ஆரம்பித்து விடும். ஆபத்து என்னவென்றால், சூரியனைச் சுற்றிவரும் நமது பூமி தனது வட்டப் பாதையை விட்டு 'வெளியில்' கட்டுப்பாடின்றி சுற்ற ஆரம்பித்துவிடும். சூரியனின் அருகில் பூமி சென்றால் பூமியின் வெப்பம் பலநூறு டிகிரிகளை எட்டும். சூரியனை விட்டு விலகிச் சென்றால் சூரிய ஓளி இல்லாமல் முதலில் எல்லாப் பயிர்களும் பிறகு அதனை உண்டு வாழும் மிருகங்களும், மனித குலமும் அழியும். முடிவில் சூரிய குடும்பத்தின் எல்லா கோள்களும் சூரியனை விட்டு பிரிந்து சென்று விடும்.

இந்த ஈர்ப்பு விசையினால் தான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எப்படி என்று பார்போம். பிரபஞ்சம் ஆரம்பித்த போது, முதலில் சக்தி அணுத்துகள்களாக மாறின, சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அணுத்துகள்கள் இணைந்து அணுக்கள் தோன்றின. அவை பெருமளவு ஹைட்ரோஜென் மற்றும் சிறிது ஹீலியம் என்ற வாயுக்களின் அணுக்க‌ளாகும். பிரபஞ்சமெங்கும் இந்த இரண்டு வாயுக்கள் மட்டும் நிரம்பியிருந்தன. அவை தவிர ஆர‌ம்ப பிரபஞ்சத்தில் வேறு ஒன்றுமில்லை.

ஈர்ப்பு விசை தன் வேலையைத் துவக்கியது. பிரபஞ்சத்தில் எல்லாப் பொருட்களுமே ஒன்றை ஒன்று ஈர்ப்பு விசையால் இழுத்துக் கொள்ளும் என்பது விஞ்ஞானத்தின் விதி. இதை உறுதி செய்ய, முதலில் ராக்கெட்டில் விண்வெளி சென்றபோது, ஒரு பாட்டிலில் உப்பு எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் உள்ளவரை தனித் தனி துகள்களாக இருந்த உப்பு, அண்டவெளி சென்றவுடன் அவைகள் உடனே ஒன்றினை ஒன்று இழுத்து கட்டியாகிக் கொண்டது. பூமி உருவாகியதே, சூரியனைச் சுற்றிவந்த பல மலைபோன்ற கற்கள் ஒன்றை ஒன்று இழுத்து இப்படி இணைந்ததுதான்.

இதே போல பிரபஞ்சத்தில் உள்ள ஹைட்ரோஜென் அணுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றை ஒன்று இழுத்து, பெரும் கூட்டாக இணைய ஆரம்பித்தன. பெரும் கூட்டு என்றால் இந்த பூமியை விட லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில், பெரிய கூட்டுகளாகக் கூடி இணைய ஆரம்பித்தன. ஈர்ப்பு விசை மேலும் மேலும் அணுக்களை நெருக்கமாக இழுத்தன. நெருக்கம் அதிகமாக அதிகமாக வெப்பம் அதிகரித்தது. பல லட்சம் டிகிரி வெப்பம் அடைந்த உடன் அங்கே 'அணுச்சேர்க்கை' நடக்கத் தொடங்கியது .

இந்த அணுச்சேர்க்கையில் சிறிது mass எனப்படும் பொருண்மை அழிக்கப்பட்டு சக்தியாக மாறும். ஒரே சமயம் பல லட்சம் ஹைட்ரோஜென் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது ஏற்படும் சக்தி பல லட்சம் அனுகுண்டுகளுக்கு இணையாகும். ஒவ்வொரு வினாடியும் பல லட்சம் அணு இணைப்புக்கள் மூலமாக வெளியாகும் சக்திதான் 'சூரிய சக்தி'. அதாவது அங்கே ஒரு சூரியன் உருவாகிறது. நமது சூரியன் எனும் நட்சத்திரம் பூமியைப் போல பத்து லட்சம் மடங்கு பெரிது. அவ்வளவு பெரிய வாயுக்கூட்டம்.

அந்த வாயுக்கூட்டதில் உள்ள எல்லா ஹைட்ரோஜென் அணுக்களும் தீரும்வரை சூரியன் 'அணுச்சேர்க்கை' மூலமாக சூரிய சக்தியான வெப்பத்தையும் ஒளியையும் கொடுக்கும். அது தீர்ந்துவிட்டால், பெட்ரோல் தீர்ந்த வண்டி போலத்தான். சூரியன் அழிந்துவிடும். பலர் நினைத்தது போல சூரியன் (நட்சத்திரங்கள்) என்றும் நிலையான ஒரு சக்தி அல்ல. அதற்க்கும் பிறப்பு உண்டு, அழிவும் உண்டு.

கருந்துளை என்றால் என்ன ?

சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது 'கருந்துளை' உருவாகின்றன. நட்சத்திரங்கள் உருவாக ஈர்ப்பு விசை காரணம் என்று கண்டோம். அந்த ஈர்ப்பு விசை தொடர்ந்து சூரியனை சுருங்கவைத்து மேலும் மேலும் சிறிதாக்க எப்போதும், அதாவது, சூரியனின் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்துகொண்டே இருக்கும். ஈர்ப்பு விசைக்கு தடங்கல் இல்லை என்றால் அது நட்சத்திரங்களை மிக மிக சிறியதாகிவிடும் . ஆனால் நட்சத்திரம் சுருங்கும்போது அணுச்சேர்க்கையினால் அணுசக்தி உருவாகிறது என்று கண்டோம். இந்த அணுசக்திதான் நட்சத்திரங்களை விரிடைய செய்கிறது . அணு சக்தி நட்சத்திரத்தை விரிவடையச் செய்யும்பொது, ஈர்ப்பு விசை அதை சுருங்கவைக்க முயலுகிறது. இந்த எதிர் எதிர் சக்திகளினால் நட்சத்திரங்கள் அதே உருவில் இருக்கின்றன. நட்சத்திரங்களின் வாழ்நாள் முழுவதும் இந்த 'tug of war' என்ற இழுபறி நடந்துகொண்டே இருக்கின்றது. ஆபத்து எப்போது வருகின்றது என்றால் நட்சத்திரத்தின் எரிபொருளான ஹைட்ரோஜென் தீரும்போது, அணுசேர்க்கை குறைந்து, அதனால் வரும் நட்சத்திரத்தை விரியச்செய்யும் அணுசக்தி வெளிப்பாடு இல்லாத நிலை வரும்போது, ஈர்ப்பு விசையின் கை ஓங்கி நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கிறது.

நமது சூரியன் என்ற 'பாக்டரி' நிற்கும்போது அது வெள்ளைக் குள்ளன் அல்லது வெள்ளைக் குள்ளி என்ற பூமி அளவுள்ள ஒரு நட்சத்திரமாக சுருங்குகிறது. ஆனால் நமது நட்சத்திரத்தை விட சில மடங்கு பெரிய நட்சத்திரமாயிருந்தால் அது அழியும்போது ஒரு 'கருந்துளை' ஆகிவிடுகிறது. பிரபஞ்சத்தின் அதி பயங்கர, அச்சமூட்டும் ஒன்றுதான் கருந்துளை.

மாபெரும் அரக்கன் என்ற பெயர் கொண்டது கருந்துளை. ஏன்? தன் அருகில் எது வந்தாலும், நட்சத்திரங்களோ அல்லது கோள்களோ, எதுவாயினும் அதை அப்படியே 'ஸ்வாகா' செய்து விடும். பூமியை விட கோடி மடங்கு பெரிய நட்சத்திரம் ஆனாலும் அப்படியே விழுங்கப்பட்டுவிடும். வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம் (அதாவது பூமியை வினாடிக்கு ஏழு முறைக்கு மேலாக சுற்றும்) கொண்ட ஒளியைக் கூட தன்னுள் இழுத்துவிடும், கருந்துளை. அங்கு ஒளி சுத்தமாக இல்லாததினால்தான் அது கருப்பாக இருக்கின்றது.

பிரபஞ்சத்தின் பெரிய பெரிய ரகசியங்களையும் கண்டுபிடித்து, பல மூட நம்பிக்கைகளை அகற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தில் சவாலாக இருப்பது கருந்துளைக்குள் செல்லும் நட்சத்திரம் போன்ற பொருட்கள் என்னவாகின்றன என்பதுதான். அதற்குள் சென்ற பொருட்களின் தடயமே இல்லாமல் போகின்றது. அந்த பொருள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பௌதீக விதிகள் எல்லாம் அங்கு ...............

பிரபஞ்சத்தின் பல, பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த விஞ்ஞானிகள், தற்போது நிரூபிக்க முடியாமல் இருப்பது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள், ஒன்று கருந்துளைக்குள் செல்லும் பொருள் என்னவாகின்றன? மற்றொன்று மாவெடிப்பு நடப்பதற்குமுன் என்ன நடந்தது?

நன்றாகப் பார்த்தால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. மாவெடிப்பு (created matter)) பொருட்களை உண்டு பண்ணுவ‌து. கருந்துளை (destroyed matter) பொருட்களை அழிக்கின்றது. மா வெடிப்பில், ஒன்றுமில்லா நிலையில் இருந்து பொருட்கள் உற்பத்தியாகின்றன. அதே சமயம், கருந்துளையில் பொருட்கள் ஒன்றுமில்லாமல் போகின்றன. இதை இரண்டையும் இணைத்துப் பார்கலாமா? கருந்துளையில் அழியும் பொருட்கள் மாவெடிப்பில் தோன்றுகின்றன என்று?

பிரபஞ்சத்தில் தோன்றும் கருந்துளைகள் மூலமாக புதிய பிரபஞ்சம் உருவாகிறது என்ற விஞ்ஞானிகளின் புதிய கோட்பாட்டை ஒத்துக் கொள்ளலாமா?

4 கருத்துகள்:

 1. Indha nalla pathivirku Aen entha comment um illa.. Enakku romba pidichirukku. migavum elimaiyaaga, purinthukolla easy aa irukku. Thanks.

  பதிலளிநீக்கு
 2. Yes we can accept this- என் கருத்து ஒன்று உள்ளது - பெருவெடிப்பின் மையம் -energy to matter,
  கருந்துளை - center for matter to energy

  This conversation is an endless process

  பதிலளிநீக்கு
 3. There is no words to say your valuable information
  Oh thank

  பதிலளிநீக்கு