பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 6 ஜூன், 2014

அக்பரும் பீர்பாலும் - பீர்பாலின் 50378 காக்கைகள்

அக்பர் : முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் .

அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.

பீர்பால் : 1528-ல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கல்பி என்னும் கிராமத்தில் பிறந்த பீர்பால் அக்பரது அவையில் ஒரு கவிஞராக , பாடகராக ,மன்னரின் ஆலோசகராக 1556-1568 வரை இருந்தவர்.


இனி அக்பர் மற்றும்  பீர்பாலின்  கதைகளை படிப்போம் ...




பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

“இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் இந்த வினாவிற்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை.

எல்லோரையும் விட புத்திசாலியான பீர்பால், அப்பொழுது தர்பாரின் உள்ளே நுழைந்தார். அரசவை ஊழியர்கள் தலை குனிந்து நிற்பதைக் கண்டார். பேரரசர் இட்ட புதிரை அவிழ்க்க முடியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அரசவைக்குரிய மரியாதையுடன் பீர்பால், பேரரசரை தலை குனிந்து வணங்கி விட்டு தன் இடத்தில் அமர்ந்தார். பேரரசர், அவரிடம் ‘பீர்பால், இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’ என்று கேட்டார்.

சமயோசித புத்தியுள்ள பீர்பால் உடனே எழுந்து நின்று ‘பேரரசே இந்நகரத்தில் ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு காக்கைகள் இருக்கின்றன’ என்றார். பேரரசர் அக்பர் ‘இவ்வளவு நிச்சயமாக நீங்கள் எப்படி அதைச் சொல்ல முடியும்?’ என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு பீர்பால், ‘தயவு செய்து அவற்றை நீங்களே எண்ணிப் பாருங்கள் பேரரசே! ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு காக்கைகளுக்கு மேல் இருந்தால், வெளியூர்களிலிருந்து பல காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வந்திருக்கின்றன” என்று பொருள்.

‘இந்த எண்ணிக்கையை விடக் குறைவாக இருந்தால் இந்த நகரத்து காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வெளியூர் சென்றிருக்கின்றன’ என்றார். பீர்பாலின் சமயோசிதமான பதிலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பேரரசர் அக்பர், ‘பிரமாதம்! பீர்பால், உனக்கு இணை யாருமில்லை’ என்று வியப்புடன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக