பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 21 மே, 2014

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிள்

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிளை கண்டுபிடித்திருக்கிறார்கள், தரங்கம்பாடியைச் சேர்ந்த ஹை-டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நிறுவனத்தார். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இந்தப் பிரச்சினைக்கு மக்களுக்கு உதவக்கூடிய எளிமையான கண்டுபிடிப்பு இந்த சைக்கிள்" என்கிறார், ஹை-டெக் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பாலசுந்தரம்.

இரண்டாகப் பிரிக்கப்படும் பழைய லாரி டயர் டியூப், சைக்கிளின் முன் மற்றும் பின் சக்கரங்களில் இணைக்கப்படுகிறது. சைக்கிளின் பின் சக்கரத்தில் இரும்புத் தகடால் செய்யப்பட்ட சிறப்பு விசிறி ஒன்றும் இணைக்கப்படுகிறது. காற்று நிரப்பப்பட்ட லாரி டயர் டியூப்பினால் மிதக்கும் சைக்கிள், பெடலை அழுத்தும் போது சுழலும் விசிறியினால் நீரில் முன்னோக்கிச் செல்கிறது. மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இதில் தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கக் கூடிய விலை மலிவான பொருட்கள். எனவே, சாதாரண சைக்கிளை மிதக்கும் சைக்கிளாக மாற்ற ஆகும் செலவு, தோராயமாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே.

இம்முயற்சியில் ஹை-டெக் நிறுவனத்தினரோடு வேதாரண்யம் செம்போடை ஆர்.வீ. பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் சூர்யா, விஜய், சூர்ய பிரகாஷ், முகுந்தன், முருகதாஸ் மற்றும் வல்லவராயன் ஆகியோரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் நடக்கும் உள்நாட்டு மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள எல்லாராலும் படகுகள் வாங்க முடியாது. எனவே, இந்த மிதக்கும் சைக்கிளை மீன் பிடிக்கவும் பயன்படுத்தலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் வடிகால் வசதி சரியில்லாததால், மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீர் இடுப்பளவிற்குத் தேங்கிவிடும். இம்மாதிரி சூழலில், மிதக்கும் சைக்கிள் பயன்படும். மேலும் உள்ளூர் நீர் வழி சுற்றுலாவில் மிதக்கும் சைக்கிளைப் பயன்படுத்தினால் புது முயற்சியாகவும் இருக்கும். சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும்" என்கிறார், மாணவர் குழு தலைவரான சூர்யா.

மற்ற சைக்கிள்கள் போல் அல்லாமல், சக்கரங்களில் பேரிங் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீரில் செல்லும் போது பெடலை எளிதாகவும், வேகமாகவும் அழுத்தலாம். மேலும் மிதக்கும் அமைப்பைக் கழற்றி, இணைப்பது எளிது.

சைக்கிளில் இணைக்கப்படும் இந்த அமைப்புகளின் மொத்த எடை ஏழரை கிலோ மட்டுமே. இதனால், சைக்கிள் எடை காரணமாக நீரில் மூழ்கிவிடும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஓட்டுபவரின் எடையை அளவிட்டு, அதற்கேற்ப மிதக்கும் அமைப்பில் சிறிய மாற்றம் செய்தால் போதுமானது. டூ இன் ஒன்னாக நீரில் மட்டுமல்லாது, சாலைகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார், ஹை-டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆராய்ச்சியாளர் முரளி.

தொடர்புக்கு : பாலசுந்தரம் 95666 68066  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக