பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 13 மே, 2014

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள்!

கல்லூரியில் படிக்குற ஏழை மாணவர்கள் படிக்குறதுக்கு உதவுற வகைல புத்தகங்களை இலவசமா சில புத்தக வங்கிகள் கொடுத்துக்கிட்டு இருக்காங்கனு படிச்சப்போ அந்த விவரத்தை அப்படியே ஷேர் பண்ணின்னா புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத ஏழை மாணவர்கள் பயனடைவாங்கனு தோணுச்சு அதனால அதை அப்படியே ஷேர் செய்றேன்..நீங்களும் இந்த விவரத்தை பகிர்ந்து மாணவர்களுக்கு உதவுங்க...ஆனா படிச்சு முடிச்சதும் பத்திரமா புத்தகத்தை திரும்ப தந்துடணும்..


 புத்தக வங்கியின் விவரங்கள் :


ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புத்தக வங்கி

சென்னையில் 1964-ல் தொடங்கப்பட்ட இந்த புத்தக வங்கியில் தற்போது 70 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. புதிய புத்தகங்கள் வாங்குவதற்காக இந்த அமைப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் செலவிடப்படுகிறது. இந்தப் புத்தக வங்கி மூலம் இதுவரை 85 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கலை, அறிவியல், பொறியியல் துறை படிப்புகளுக்கான புத்தகங்கள் இங்கு இருக்கின்றன.கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது கல்லூரி கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கொண்டு வந்து காட்டினால், இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்களைப் பெறுவதற்கான விண்ணப்பம் கொடுக்கப்படும். வரும் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து ஜூன் 20-ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி, கல்லூரி முதல்வரிடம் கையெழுத்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போதே என்னென்ன புத்தகங்கள் வேண்டும் என்பதையும் குறித்துக் கொடுக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 6 அல்லது 7 புத்தகங்கள் கொடுக்கப்படும். இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்களைப் பெற விரும்பும் கலை, அறிவியல் பட்ட மாணவர்கள் 200 ரூபாயும், பொறியியல் மாணவர்கள் 500 ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் படிப்பு முடிந்ததும் திருப்பித் தரப்படும்.

விவரங்களுக்கு: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புத்தக வங்கி, 4. அட்கின்சன் சாலை,
வேப்பேரி,
சென்னை - 600 004.
தொலைபேசி: 044-25610369, 25610978
இணைய தளம்: http://ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி

கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி மூலம், இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் படித்துப் பயனடைந்திருக்கின்றனர். இங்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கலை, அறிவியல், பொறியியல், எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான புத்தகங்கள் படிக்க கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியானதும் இந்த புத்தக வங்கியை அணுகவேண்டும். ரேஷன் கார்டு ஜெராக்ஸ், கல்லூரி ஐடி ஜெராக்ஸ் ஆகியவற்றை காண்பித்து, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒரு மாணவருக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: கேசவன், ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை இலவச புத்தக வங்கி, 6,7-வது தெரு, யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600040 தொலைபேசி: 044-26203287, 26206261 இணைய தளம்: www.jgvvbookbank.org

ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச புத்தக வங்கி

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இலவசப் புத்தக வங்கி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்தப் புத்தக வங்கி மூலம் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவரங்களுக்கு: ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச புத்தக வங்கி, மயிலாப்பூர், சென்னை - 600004. தொலைபேசி: 044-24621110

மாணவர் திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் புத்தக வங்கி

சென்னையில் 2009-ல் தொடங்கப்பட்ட மாணவர் திறன் மேம்பாட்டுக் கழக இலவச புத்தக வங்கியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த புத்தக வங்கியில் தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. கலை, அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு மாணவர்கள் படிப்பதற்காக இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மெரைன் என்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மட்டும் இங்கு புத்தகங்கள் இல்லை. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பெற்றோர், தெரிந்த நபர், கல்லூரி முதல்வர் அல்லது துறைத்தலைவரிடம் கையொப்பம் பெற்று, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுக்கட்டணமாக ரூ.200 மட்டும் செலுத்த வேண்டியதிருக்கும். புத்தக சேவை மட்டுமின்றி மாணவர்களுக்கு எதிர்கால திட்டமிடல் குறித்து இலவச ஆலோசனையும் இங்கு தரப்படுகிறது.

விவரங்களுக்கு: மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் இலவச புத்தக வங்கி, 44/48, எஸ்.பி. கோயில் 3-வது தெரு, திருவொற்றியூர் (பெரியார் நகர்), சென்னை - 600019 தொடர்புக்கு: 9444305581, 9444124519

எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை இலவச புத்தக வங்கி

கும்பகோணத்தில் 2009-ல் தொடங்கப்பட்ட எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை இலவச புத்தக வங்கியின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். தற்போது 2,500 புத்தகங்கள் இந்த புத்தக வங்கியில் இருக்கிறது. கலை அறிவியல் மற்றும் எம்பிஏ, எம்சிஏ கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள் இங்கு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும்போது, அக்கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி புத்தக வங்கியை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படும். நேரடியாக இவர்களை அணுகும் மாணவர்களுக்கும், தகுதியின் அடிப்படையில் புத்தகங்களை வழங்குகிறார்கள். போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் இங்கு படிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.எம். அறக்கட்டளை இலவச புத்தக வங்கி, 7/49 E, செல்வக்குமார் பாபு இல்லம், மெயின் ரோடு, புளியம்பேட்டை, கும்பகோணம் - 612 103. தொடர்புக்கு: 9840020110

கோபால்ராஜன் - மங்களேஸ்வர் புத்தக வங்கி

தூத்துக்குடியில் 1996-ல் தொடங்கப்பட்ட கோபால்ராஜன் - மங்களேஸ்வர் புத்தக வங்கி மூலம் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். தற்போது மூவாயிரம் புத்தங்கள் இந்த புத்தக வங்கியில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும்போது தூத்துக்குடியில் இருக்கும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நேரடியாக விண்ணப்பங்கள் அனுப்பப்படும். கல்லூரி முதல்வரே தகுதியான மாணவர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்து தருவார். புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவர்கள், அதில் பெயர் எழுதக்கூடாது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைத்து விடவேண்டும்.

விவரங்களுக்கு: பொன்னுசாமி, நிறுவனர், கோபால்ராஜன் - மங்களேஸ்வர் புத்தக வங்கி, 4/56. தனசேகரன் நகர், இரண்டாவது தெரு, தூத்துக்குடி - 628002 தொடர்புக்கு: 9944025528

ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி:

ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி 1972-ல் தொடங்கப்பட்டது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இங்கு தற்போது பொறியியல், கலை, அறிவியல் பட்ட மாணவர்களுக்கான 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 20. பொறியியல் பிரிவு மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், கலையியல் பிரிவு மாணவர்கள் ஐநூறு ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். இந்த கட்டணம் படிப்பு முடிந்ததும் திருப்பித் தரப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் மற்றும் துறை தலைவர் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 6 புத்தகங்கள் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: கமலேஷ் சேத், ஸ்ரீமகாவீர் ஜெயின் இலவச புத்தக வங்கி, குகுகு ஜெயின் பவன், 765. ஓப்பணக்கார வீதி, கோவை - 641001. தொடர்புக்கு: 9363149468. 9894023235

ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கி:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கியில் 5 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் கலையியல் பட்ட மாணவர்களுக்கான புத்தகங்களை படிக்க இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 6 புத்தகங்கள் வழங்கப்படும். பொறியியல் பட்ட மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், கலையியல் பட்ட மாணவர்கள் ஐநூறு ரூபாயும் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். இந்த கட்டணம் படிப்பின் இறுதியில் திருப்பித் தரப்படும்.

விவரங்களுக்கு: வி. சுரேஷ், ஸ்ரீவாசவி இலவச புத்தக வங்கி, 364, 364 அ, வைசியாள் தெரு, கோவை - 641001. தொடர்புக்கு: 9150428956, 9443822062

ராக்சிட்டி வெல்பேர் அசோசியேஷன் புத்தக வங்கி:

திருச்சியில் ராக் சிட்டி வெல்பேர் அசோசியேஷன் புத்தக வங்கி 1998-இல் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தக வங்கியின் மூலம் இதுவரை 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இப்புத்தக வங்கியில் தற்போது 11 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. திருச்சியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டும் இங்கு இலவசமாக படிப்பதற்கு வழங்கப்படுகின்றன. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஜூன் மாத தொடக்கத்தில், அவர்களது கல்லூரியின் மூலமாக இந்த புத்தக வங்கியை அணுகி, தங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நூலக பராமரிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்த வேண்டியதிருக்கும்.

விவரங்களுக்கு: அசோக் காந்தி, ராக்சிட்டி வெல்பேர் அசோசியேஷன் இலவச புத்தக வங்கி, 54-ஐ, ஜாபர் ஷா தெரு, பி.என். லாட்ஜ் எதிரில், திருச்சி - 620008 தொடர்புக்கு: 9150038420, 0431-2700296

தி புக் பேங்க் டிரஸ்ட்:

1994-ல் தொடங்கப்பட்ட இந்த புத்தக வங்கியின் மூலம் இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இங்கு தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கலை, அறிவியல், பொறியியல், முதுநிலை மாணவர்கள் ஆகியோர்களுக்கான புத்தகங்கள் இங்கு வழங்கப்படும். கல்லூரிக் கட்டண ரசீது நகல், குடும்ப அட்டை நகல் கொடுத்தால் விண்ணப்பம் தருவார்கள். அதனை முறையாக பூர்த்தி செய்து, தெரிந்த ஒருவரிடம் கையொப்பம் பெற்று தரவேண்டும். பாதுகாப்புக் கட்டணமாக மாணவர்கள் ரூ. 250 செலுத்த வேண்டும். புத்தகங்களை இறுதியாக படித்து முடித்து தரும்போது இக்கட்டணம் திருப்பித் தரப்படும். போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் இங்கு படிக்க கிடைக்கிறது.

விவரங்களுக்கு: தி புக் பேங்க் டிரஸ்ட், மேத்தா பில்டிங், 898, சிறுகுளம் ரோடு, சிவகாசி - 626123. தொலைபேசி எண்: 04562 - 222727
         
                                                      ----- நன்றி புதியதலைமுறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக