பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 10 ஏப்ரல், 2014

அடங்கொக்கா மக்கா ..எப்படித்தான் சமாளிக்குறாரோ !!!
ஒரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.

ஒரு பெரிய விடுதிபோல இருக்கும் சயோனாவின் வீடு கிட்டத்தட்ட விடுதிபோலத்தான் இயங்குகிறது. மூன்று தச்சு வேலையகங்களை வைத்திருக்கிறார் சயோனா. தவிர, காய்கறித் தோட்டங்கள், கோழி - பன்றிப் பண்ணைகளில் தொடங்கி பள்ளிக்கூடம், மைதானம் வரை வைத்திருக்கிறார் சயோனா. ஆண்கள் தச்சு வேலையைக் கவனிக்க, பெண்கள் தோட்டம், பண்ணை மற்றும் சமையல் வேலைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.வெவ்வேறு வார்த்தைகளில் இந்தக் குடும்பத்தின் வேலைகளை வர்ணித்தாலும் அடிப்படையில், எல்லாமே குடும்பத்துக்கான சாப்பாட்டுச் சமாச்சாரம் மட்டும்தான். ஒரு நாளைக்குச் சராசரியாக 90 கிலோ அரிசி, 40 கிலோ உருளைக் கிழங்கு வேண்டுமாம். அசைவம் என்றால், 30 கோழிகளும் இரண்டு பன்றிகளும் வேண்டுமாம். ஆக, குடும்பத் தேவையைப் பெண்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வேலையைப் பகிர்ந்துகொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. “சயோனா எல்லாவற்றையும் சரியாகப் பிரித்துக்கொடுத்துவிடுவார்” என்கிறார்கள் மனைவிகள்.

சயோனாவுக்கு எல்லாமே சுழற்சி முறைதான். அவருடன் உணவு மேஜையில் யார் உட்கார்ந்து சாப்பிடுவது, வேலைக்குக் கூடப் போவது என்பதிலிருந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வது உட்பட. சுழற்சி முறையை யாரும் மீறக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் சயோனா, ஊரில் செல்வாக்கு மிக்க ‘ஹம்த்லன் ருன்புய்' தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார். “குடும்பத்தில் மட்டுமல்ல; ஊரிலும் அவர் ஒரு ராஜா மாதிரிதான். சாப்பாடு, கல்வி, மருத்துவச் செலவுக்குத் தேவை என்று யார் போய் நின்றாலும் தட்டாமல் உதவி செய்வார். அதனாலே அவர்மீது இந்த ஊரில் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நிறைய பெண்கள் அதனால்தான் அவரை விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டார்கள்’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

உண்மைதான். எல்லாத் திருமணங்களையும் பூரண சம்மதத்தின்பேரிலேயே செய்து கொண் டிருக்கும் சயோனாவின் பெரும்பாலான திரு மணங்கள் காதல் திருமணங்கள்.

முதல் மனைவி ஜத்தியாங்கிக்கு இப்போது 70 வயதாகிறது. முதல் திருமணம் நடந்தபோது சயோனாவுக்கு 17 வயதாம். “அவர் கடவுள் மாதிரி. அவரை எல்லோருமே விரும்புவார்கள். அவரால் நிறைய பேரை வாழவைக்க முடியும். நான் அவரை ஒரு கைதி மாதிரி ஆக்கிவிடக் கூடாது அல்லவா?” என்று கேட்கும் ஜத்தியாங்கிக்கு, சயோனாவின் மனைவி என்கிற ஸ்தானத்தைப் பலரிடம் பறிகொடுக்க அல்லது பகிர்ந்துகொள்ள நேரிட்ட இழப்பைக் காட்டிலும் குடும்பத்தின் மூத்த நிர்வாகி என்கிற பெருமிதமே வெளிப்படுகிறது. அச்சுப் பிறழாமல் அதே மாதிரி பேசுகிறார் கடைசி மனைவியான முப்பது வயது சயாம்தாங்கி. “உலகத்தில் எல்லோருக்கும் தாங்கள் விரும்பிய கணவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்குக் கிடைத்திருப்பதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அவரைக் கவனித்துகொள்வது கடவுளைக் கவனித்துக்கொள்வதற்குச் சமம்” என்கிறார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சயோனா வேடிக்கையானவராகத் தெரியலாம். அவரோ மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவராகப் பேசுகிறார்.

“என்னுடைய தந்தை சாலியா சானாவுக்கு ஏழு மனைவிகள், நாங்கள் 29 பிள்ளைகள். கடவுள் என்னை மேலும் ஆசிர்வதித்திருக்கிறார். கடவுள் என்னிடத்தில் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். என் குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவனின் சந்தோஷ வாழ்க்கைக்கும் நான் உழைக்க வேண்டும்; உழைக்கிறேன். இதற்கு மேலும் மனைவி - குழந்தைகளைத் தந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்” என்று சொல்லும் சயோனா, பலதார மணம்பற்றிப் பேசும்போது, “எங்கள் சமூகத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. என்னை விரும்பியவர்களை நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். அதனால், நான் எதுவும் தவறு செய்வதாக நினைக்கவில்லை” என்கிறார்.

இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நியாயமா என்று கேட்டால், “நாட்டிலேயே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று எங்களுடையது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்கிறார். “எங்கள் குடும்பமும் வாழ்க்கையும் கூட்டுறவுக்கான உதாரணம். இந்தக் கூட்டுறவுதான் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். நான் இப்படிப்பட்ட வாழ்க்கையைப் புதிய தலைமுறைக்கான வாழ்க்கையாகப் பார்க்கிறேன். அதனால்தான் என் வீட்டுக்கும் பள்ளிக்கும் மைதானத்துக்கும்கூட புதிய தலைமுறை (சுவாந்தர்) என்றே பெயரிட்டிருக்கிறேன்’’ என்கிறார்.

ஐந்து ஓட்டுகள் இருக்கும் வீட்டையே மொய்க்கும் நம்மாட்கள் சயோனாவைத் தாங்குதாங்கென்று தாங்கும் விதத்தைச் சொல்லவும் வேண்டுமா? சயோனா கையில் வீட்டு ஓட்டுகள் மட்டும் இல்லை; வெவ்வேறு வீடுகளில், பகுதிகளில் உள்ள குடும்ப ஓட்டுகள், அவரை மதிக்கும் ஊர் மக்கள் ஓட்டுகளும் இருக்கின்றன என்பதால் ராஜ கவனிப்புதான். ஒரு முரண்பாடு என்னவென்றால், சயோனா அரசாங்கத்தை நம்பவில்லை. பொறுப்புகளை நாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

சயோனாவைப் பொறுத்த அளவில் இந்தியா என்பது முழுக்க முழுக்க சுதந்திரத்தின் குறியீடு. “சீனாவில் இப்படியொரு வாழ்க்கையை வாழ அனுமதிப்பார்களா? யாருக்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் வாழ ஒரு நாடு அனுமதிக்க வேண்டும். இந்தியா என் மூலம் இந்தச் செய்தியை உலகுக்குச் சொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

சயோனாவின் மூத்த மகன் பர்லியனாவும் பலதார மணத்தில் ஆர்வத்தோடு இருக்கிறார். “தாத்தா, அப்பா அளவுக்கு இல்லாவிட்டாலும், குறைந்தது இரண்டு திருமணங்களாவது செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் பர்லியனா.

பிள்ளைகள் எல்லோரும் இப்போதே சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஜூலை 21 அன்று சயோனாவின் 70-வது பிறந்த நாள். ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு பக்த்வாங் இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறது. அப்போது சயோனாவின் வாக்கு வங்கியில் இன்னொரு வாக்கு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

 (என்னத்த சொல்ல!! அட என்னத்த சொல்ல !!சொல்ல வார்த்தையே இல்ல ...)


Courtesy : Hindu Paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக