பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 13 அக்டோபர், 2026

சந்தானம் சார்… எங்க மனசுல நீங்க எப்பவுமே ஹீரோதான்!


ரீசண்டா ஓடிடில சூரி நடிச்ச ‘மண்டாடி’ படம் பார்த்தேன். அவரைப் பார்க்கும்போது ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. காமெடியனா பார்த்த ஒருத்தரை, இப்ப கதையின் நாயகனா அவ்வளவு இயல்பா ஏத்துக்க முடியுது. அவருடைய நடிப்பு, சில அசைவுகள், சண்டைக் காட்சிகள்… இதெல்லாம் பார்க்கும்போது, “எவ்வளவு வளர்ந்திருக்காரு!”ன்னு தோணுச்சு.

ஆனா அதே நேரத்துல, எனக்கு சந்தானம் சாரும் ஞாபகத்துக்கு வந்துட்டே இருந்தாரு.

அவரும் பல வருஷமா ஹீரோவா தனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்க முயற்சி பண்ணிட்டிருக்காரு. அவர் எதிர்பார்க்குற அளவுக்கு படங்கள் வரவேற்பைப் பெறாதப்போ, ஒரு ரசிகையா எனக்கு அவர்கிட்ட சொல்லணும்னு தோணுறது இதுதான்…

சந்தானம் சார், நீங்க ஹீரோவா ஆகணும்னு நினைக்கிறதுக்கு முன்னாடியே, எங்க மனசுல நீங்க ஹீரோதான்.

ஒரு படத்துல பெரிய ஹீரோ இருந்தாலும், உங்களுடைய காட்சிகள் எப்ப வரும்னு காத்திருந்து பார்த்திருக்கோம். சில படங்களை உங்களுடைய காமெடிக்காகவே திரும்பத் திரும்ப பார்த்திருக்கோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், அந்தப் படத்தை ரசிக்க வச்ச முக்கியமான ஆளா நீங்களும் இருந்திருக்கீங்க.

வடிவேலு சாரோட வசனங்கள் எப்படி அன்றாட வாழ்க்கையில ஒவ்வொரு சூழ்நிலைக்கும் வந்து பொருந்துதோ, அதே மாதிரி உங்களுடைய வசனங்களையும் நாங்க இன்னமும் பயன்படுத்திட்டுதான் இருக்கோம். நண்பர்களோட பேசும்போது, வீட்டில கிண்டல் பண்ணும்போது… உங்களுடைய காமெடி எங்க வாழ்க்கையோட கலந்துருச்சு.

உங்களுக்குத் தனியா சண்டைக் காட்சிகளோ, டூயெட் பாடல்களோ இல்லாம இருந்திருக்கலாம். ஆனா அதுக்காக எங்க மனசுல உங்களுக்கான இடம் குறைஞ்சதே கிடையாது.

நீங்க தனி ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்போ, எனக்கு அதிகமா தோணுனது, “உங்களை ஹீரோவா பார்க்க முடியல”ங்கிற எண்ணம் இல்ல. “நம்மை இவ்வளவு சிரிக்க வச்ச அந்த சந்தானத்தை மிஸ் பண்றோமே!”ங்கிற உணர்வுதான்.

ஒரு சாதாரண வசனத்தைக்கூட உங்களுடைய டைமிங்கால காமெடியா மாத்திடுவீங்க. கூட நடிக்கிறவங்களோட சேர்ந்து நீங்க பண்ணுற கலாட்டா, அந்தக் கவுன்ட்டர்கள்… அதையெல்லாம் இன்னும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.

இப்பவும் யூடியூப்ல உங்களுடைய பழைய காமெடி காட்சிகளைப் போட்டா, நேரம் போறதே தெரியாம பார்த்துட்டிருக்கோம். ஏற்கெனவே பார்த்த காட்சிதான். அடுத்து என்ன வசனம் வரும்னும் தெரியும். ஆனாலும் மறுபடியும் சிரிக்கிறோம். அதுதான் உங்களுடைய சிறப்பு.

நீங்க சீரியஸான கதாபாத்திரங்கள்ல நடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லல. ஒரு நடிகரா வேற வேற கதாபாத்திரங்கள் பண்ணணும்னு உங்களுக்கு ஆசை இருக்கும். அதை புரிஞ்சுக்க முடியுது. உங்களுக்குப் பொருத்தமான கதையும் இயக்குநரும் அமையும்போது, இன்னும் நிறைய சாதிக்க முடியும்.

ஆனா அந்தப் பயணத்துல, எங்களைச் சிரிக்க வச்ச உங்களுடைய அந்தத் தனித்தன்மையையும் தொடர்ந்து பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.

எல்லா ரசிகர்களுக்காகவும் என்னால பேச முடியாது. ஆனா உங்களுடைய காமெடியை ரசிச்ச ஒரு ரசிகையா சொல்றேன்…

நீங்க எங்களைச் சிரிக்க வச்ச அந்த நாட்கள்லயே, எங்க மனசுல ஹீரோவாகிட்டீங்க சார். அதை நிரூபிக்க உங்களுக்குத் தனியா ஒரு சண்டைக் காட்சியோ, டூயெட் பாடலோ தேவையே இருந்ததில்ல.