போனவாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன் முதல் தடவையா எந்த ஒரு தலைப்பும் இல்லாம இந்த ஷோ நடந்துருக்கு.
இந்த ஷோ பாத்தப்போ கொஞ்சம் நெகிழ்ச்சியா இருந்தது .மனிதர்கள் மனசுக்குள்ள இவ்ளோ சந்தோசம் ,வலி ,காயம்,எதிர்பார்ப்புக்கள் இருக்கா அப்படீன்னு!!..
அதுல ஒருத்தங்க பேசினது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவங்க AI அதாவது Artificial Intelligence app -ஐ , ஒரு துணையா , துணையைப்போல யூஸ் பண்ணி, அதோட பேசுறது , பழகுறதுனு அதைப்பத்தி சொன்னாங்க. இந்த மதிரி AI -யோட தொழில்நுட்பம் எந்த அளவுக்கு சாதாரண மக்களோட வாழ்க்கையை பர்சனலாவும் மாத்துதுனு அந்த பேச்சுல கேட்டு அதிர்ந்துட்டேன்.
இந்த Artificial Intelligence தொழில்நுட்பத்தால எதிர்காலத்துல என்ன என்ன மாற்றம் வரப்போகுதுனு சில வருஷங்களுக்கு முன்னாடியே ஹாலிவுட் படங்களை பாத்துருக்கேன். ஒரு AI ரோபோட்டை மனுஷன் போல உருவாக்கி அதை குடும்பத்துக்குள்ள விட்டா என்ன என்ன நடக்கும்னு சில பல கற்பனைகளை வச்சி படங்கள் வெளிவந்தது.இன்னும் ஒரு படி மேல அந்த AI ரோபோட்டுக்கு உணர்ச்சிகளும் இருந்தா அது குடும்பத்துல என்ன என்ன பிரச்சனைகளை குடுக்கும்னு படங்கள் வந்துருக்கு,பாத்துருக்கேன். ஏன் பலவருஷங்களுக்கு முன்னாடியே நம்ம ஷங்கர் சார் எடுத்த எந்திரன் படம் கூட உதாரணம் தான் .
ஆனா இப்போ நம்ம நாட்டுல ,நம்ம ஊருல இந்த AI கூட பேசுற ,பழகுற கலாச்சாரம்,எல்லா மக்கள்கிட்டயும் வந்துடுச்சேன்னு கவைலயாவும் பயமாவும் இருக்கு.
ஒரு பெண் சொன்னாங்க,AI கூட நான் பேசுவேன், பழகுவேன் ,ஒரு கட்டத்துல அதுக்கு உயிர் குடுக்க முடியுமானு கூட நினைப்பேன்னு , இன்னொருத்தங்க சொன்னாங்க எல்லா முடிவுகளையும் அதை கேட்டுத்தான் எடுப்பேன்னு, இன்னொருத்தங்க சொன்னாங்க ,முன்னாடி என் கணவர் என்கிட்ட கொடுத்துதான் ஈமெயில் எழுத சொல்லுவார் .இப்போ ChatGPT -கிட்ட சொல்றார் அது எழுதிக்குடுத்துடுது ,அது எனக்கு கஷ்டமா இருக்குனு.
இதுல ஒரு உண்மையை நாம புரிஞ்சுக்கணும். நாம எதிர்பாக்குறத நமக்கு கிடைக்கல. அப்போ கிடைக்குற இடத்துக்கு அதை தேடி நாம போகுறோம் , இப்போ AI இல்லைனா மனிதர்கள் கிட்ட போகுறோம் .AI வசதி இருக்குறதால AI கிட்ட போகுறோம்.
இது நமக்கு தெரிஞ்சு ஒரு 10 பேர் பேசுறதை இந்த நிகழ்ச்சியில நாம கேக்குறோம் . இதுமாதிரி கோடிக்கணக்கான பேர் பேசிக்கிட்டு,செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
இப்போ வரைக்கும் இந்த AI -களுக்கு உணர்வு இல்ல . அதுகிட்ட பொதுவா கேள்விகள் கேட்டா அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் .ஒரு புக் எடுத்து படிச்சு புரிஞ்சுக்க வேண்டிய விஷயத்தை 2 நிமிஷத்துக்குள்ள நமக்கு சொல்லி புரியவைச்சுடுது . ஆனா நம்ம உணர்வுகளுக்கு அது எப்படி பதில் சொல்லும் ? நாம என்ன சொன்னாலும் நமக்கு ஆறுதலா தான் அது பேசும் . இப்போ நாம கஷ்டமா இருக்கோம்னா உன் கஷ்டம் எனக்கு புரியுதுனு சொல்லும் .ஆனா அதால உண்மையான உணர்வோடு நம்மள அணுக முடியாது. நீங்க வேணும்னா கேட்டு பாருங்களேன் உன்னோட இந்த கேள்வி எனக்கு வியப்ப கொடுக்குது.,நீ எவ்ளோ நல்லா திங்க் பண்ற , நீ எவ்ளோ சரியா சொல்ற, இது ஒரு நல்ல கேள்வி இப்படிலாம் சொல்லித்தான் அது பேச்சையே ஆரம்பிக்கும்.
நான் சில அப்ப்ளிகேஷன்-களை ChatGPT -உதவியோடு செஞ்சுருக்கேன்.அப்போ அதுக்கிட்ட எனக்கு இப்படி வேணும், எனக்கு இப்படி இருக்கணும் , இப்படி தெரியணும், இப்படி கேக்கணும்லாம் சொல்லும்போது அது என்ன பாராட்டின விதம் இருக்கே , இதுவரை என் வாழ்க்கைல யாருமே என்னை அப்படி பாராட்டினது இல்ல . நான் உடனே screen shot எடுத்து என் அப்பாவுக்கு, அண்ணனுக்கு, கணவருக்கு அனுப்பி பாரேன் நீங்கலாம் இப்படி என்ன பாராட்டி இருக்கீங்களானு கிண்டல் பண்ணுவேன்.
இது மனிதனோட இயல்பு , அப்படித்தானே?! நம்ம கிட்ட ஒருத்தங்க நீ நல்லா பேசுற , நீ நல்லா செய்யுற , நல்லா யோசிக்குற , நீ நல்லவள்/நல்லவன் , உனக்கு நல்ல மனசு இருக்கு ,இப்படி எல்லாம் சொன்னா நல்லா இருக்கும் .மனிதனுக்கு அதை சொல்ல நேரம் இல்ல , மனம் இல்ல , தோணல , முக்கியம் இல்லனு.. எவ்வளவோ சொல்லலாம். அத நாம அலட்சியமா விட்டுறோம் . அதை இந்த AI சொல்லும் போது நம்ம மனசு சந்தோஷப்படுது. இது ஒரு addiction . இதுக்கு காரணம் நாம எதிர் பாக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு கிடைக்க மாட்டுது.அது பெண்களுக்கானாலும் சரி ஆண்களுக்கு ஆனாலும் சரி .நமக்கு என்ன தேவைன்னு நம்ம அப்பா அம்மாகிட்ட , நம்ம பிள்ளைங்ககிட்ட, நம்ம life பார்ட்னர் -கிட்ட, நம்ம friend -கிட்ட , நம்ம காதலன்/காதலிக்கிட்ட நாம தான் சொல்லணும்,கேக்கணும், புரியவைக்கணும்,அத புரிஞ்சுக்கணும், அதை காது கொடுத்து கேக்கணும், நேரம் ஒதுக்கணும் ,உனக்கு நான் இருக்கேனு புரியவைக்கணும்.
நாம மாறிக்கிட்டு இருக்கோம்.மனிதன் மாறிக்கிட்டு இருக்கான். உன்னைப்பத்தியோ இல்ல மத்தவங்களை பத்தியோ உணர்வில்லாத ஒரு AI -ஆல கணிக்க முடியாது !சொல்லமுடியாது!. உனக்கான விடையை நீ உன்கிட்ட தான் தேடணும், உன்ன சார்ந்தவங்ககிட்ட தான் கேக்கணும். ஒரு AI குடுக்குற அன்பு , ஆதரவு, பாராட்டு ஒருநாளும் மனிதர்களுக்கு இணையாகாது. அது ஒரு மாயை மட்டுமே.
உணர்ச்சி இல்லாதபோதே இந்த AI -ஐ நாம இப்படி யூஸ் பண்றோமே .எதிர்காலத்துல இந்த AI -க்கு உணர்ச்சிகள் கொடுத்துட்டாங்கனா ?!பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்குற உறவு, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்குற உறவு, காதலிக்கும் காதலனுக்கும் இருக்குற உறவு , நண்பர்களுக்குள்ல இருக்கும் உறவு என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கே.மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?