பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 1 ஜூன், 2017

கொசுத்தொல்லைக்கு எளியவழி!!

* கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும்.

* புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இந்தச் செடிகள் இருக்கும் இடத்தை கொசுக்கள் நெருங்காது.

* காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போடலாம் அல்லது யூகலிப்டஸ் இலைகளை உலரவைத்து, அதைக்கொண்டு வீடு முழுக்கப் புகைபோடலாம். இந்தப் புகை கொசுக்களிடம் இருந்து காக்கும். ஆஸ்துமா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் மட்டும் புகை போடுவதைத் தவிர்க்கவும்.

* பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

* எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யும்..

* புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுக்க தெளிக்கவும். இந்த வாசனைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கொசுக்கள் பறந்துவிடும்.

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், கொசுக்கள் கிட்டே வராது; சுகந்தமான வாசனையும் கிடைக்கும்.

* கற்பூரத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் மிதக்கவிடவும். இதன் மணம் கொசுக்களை விரட்டும்.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளிக்கவும். கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது.

* வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கவும். இந்தத் தைலத்தைத் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் நம்மை நெருங்காது.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். இது, கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதோடு, சருமத்தையும் பாதுகாக்கும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தும்கூட.

* யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். கொசுக்கள் கிட்டே வராது.

* கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைக்கலாம். 20 நிமிடங்களில் அவை இல்லாமல் போய்விடும்.

* வீட்டின் உள்ளேயும் ஜன்னல் ஓரங்களிலும் துளசிச் செடியை வளர்க்கலாம். துளசிச் செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு.* தேயிலை எண்ணெயை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். தேயிலை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுவது. இது ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கலாகவும் செயல்படும். கொசுக்களிடம் இருந்து நம்மைக் காக்க்கும்.

* புதினா, புதினா இலைச் சாறு, புதினா எண்ணெய், புதினா சென்ட் இவையும் கொசுக்களை விரட்டப் பயன்படும். புதினா இலைச் சாறு அல்லது புதினா சென்ட்டை அறையில் ஸ்பிரே செய்யலாம். புதினா எண்ணெயை சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். புதினா செடியை ஜன்னல் ஓரத்தில் வளர்க்கலாம்.

* வெட்டி வேரின் எண்ணெயை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வெட்டிவேர் செடியை வளர்க்கலாம். இதன் வாசனை கொசுக்களை விரட்டியடிக்கும்.

* சாமந்திச் செடி, எலுமிச்சை, வேம்பு போன்ற மரங்களை வளர்க்கலாம். இவை கொசுக்களிடம் இருந்து நம்மைக் காக்கும். மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கும்.

* 30 துளி லாவண்டர் எண்ணெயை இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இது கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதுடன், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் உதவும்.

* தண்ணீர் தேங்கும் இடங்களில்தான் கொசுக்கள் வளரும். எனவே, வீட்டின் மூலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொளளவேண்டியது அவசியம். வாரம் இரு முறை கிருமிநாசினியைப் பயன்படுத்தி வீட்டைத் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.


                                                          --- விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக